திமுக இணைய அணி என்ன செய்கிறது? ட்விட்டரில் வெளுக்கும் எதிர்ப்பாளர்கள்

அதிகாரத்தில் இல்லாத திமுக.வையே ட்விட்டரில் இப்போதும் அடித்து துவைத்து டிரெண்ட் ஆக்குவது ஆச்சர்யம்!

திமுக தகவல் தொழில்நுட்ப அணி என்னதான் செய்கிறது என்று தெரியவில்லை. காரணமே இல்லாமல் ட்விட்டரில் திமுக.வை வெளுத்து ‘ட்ரெண்ட்’ ஆக்குகிறார்கள் எதிர்ப்பாளர்கள்!

திமுக.வுக்கு இணையான கட்டமைப்பு கொண்ட கட்சி, இப்போது தமிழ்நாட்டில் இல்லை. அண்மையில் அந்த அணி சார்பில் மாவட்டம் வாரியாக தகவல் தொழில்நுட்ப அணியும் அமைக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் சபாநாயகர் பிடிஆர் பழனிவேல்ராஜன் மகனும் எம்.எல்.ஏ.வுமான பி.டி.ஆர்.பி.தியாகராஜன் அதன் மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான பிரமுகர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த அணி இயங்குகிறது.

ஆனாலும் ஏனோ இணையத்தில் இந்த அணி இன்னமும் படு வீக்! ஓரிரு மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் மத்திய மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் திமுக பெண் நிர்வாகி ஒருவர் தனது இடுப்பை இன்னொருவர் கிள்ளிவிட்டதாக புகார் கொடுத்தார்.

அன்று முழுக்க ட்விட்டரில், ‘இடுப்பு கிள்ளி திமுக’ என ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை ட்ரெண்ட் ஆக்கியும் கொண்டாடினார்கள் திமுக எதிர்ப்பாளர்கள்! அதே ரீதியில் இன்று(ஜூலை 8) திடுதிப்பென ‘திடுட்டு திமுக’ என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது!

திடீரென எதற்காக இந்த ஹேஷ்டேக்கை உருவாக்கினார்கள்? எதற்காக இதை ட்ரெண்ட் செய்தார்கள்? என யாருக்கும் தெரியவில்லை. ஆனால் திமுக எதிர்ப்பாளர்கள் பலரும் இணைந்துகொண்டு கடந்த காலங்களில் எழுந்த திமுக மீதான விமர்சனங்களை எல்லாம் பட்டியலிட்டு, ‘திருட்டு திமுக’ என்கிற ஹேஷ்டேக்கையும் இணைத்து உலவ விட்டபடி இருக்கிறார்கள். திமுக.வின் வாரிசு அரசியல், இந்து மத எதிர்ப்பு ஆகியனவையே அதிகமாக இந்த விமர்சனங்களில் முன்வைக்கப்படுகிறது.

பாஜக ஆதரவாளர்கள், ரஜினிகாந்த் ஆதரவாளர்கள், பாமக அபிமானிகள் ஆகியோர் அதிக அளவில் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர். திமுக.வின் பிரதான எதிர்க்கட்சியும் தமிழக ஆளும்கட்சியுமான அதிமுக, ட்விட்டரில் அவ்வளவு வலுவாக இல்லை. அவர்கள் இதை பெரிதாக கண்டு கொள்ளவும் இல்லை!

7 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இல்லாத திமுக.வையே ட்விட்டரில் இப்போதும் அடித்து துவைத்து டிரெண்ட் ஆக்குவது ஆச்சர்யம்! இதில் திமுக தரப்பின் பதிலடி கொஞ்சமும் இல்லை. ட்விட்டரில் திமுக அபிமானிகள் மொத்தமாக பதுங்கியது ஏன் என்று தெரியவில்லை.

அண்மையில்தான் மாவட்டம் வாரியாக பார்த்து பக்குவதாக தேர்வு செய்யப்பட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் என்ன செய்கிறார்கள்? என்றும் தெரியவில்லை. ஆளும்கட்சிக்கு எதிராகவோ, பாஜக.வுக்கு எதிராகவோ திமுக தரப்பு இப்படி பெரிதாக ஹேஷ்டேக்களை ட்ரெண்ட் செய்வதும் இல்லை.

கடந்த ஏப்ரலில் மோடிக்கு எதிரான ‘கோ பேக் மோடி’ ட்ரெண்டிங்கில் திமுக.வுக்கு பங்கு உண்டு என்றாலும், அதில் பல்வேறு சிறுசிறு இடதுசாரி மற்றும் தமிழ் அமைப்புகளின் பங்கும் கணிசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close