தனது, வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் 800 திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்ததையடுத்து விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையில், ட்விட்டர் சேவையில் ரித்திக் என்ற பயனர், " விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்தார். இதன் மூலம், இலங்கையில் வாழும் தமிழர்களின் வேதனையை புரிந்து கொள்ள வைப்போம் " என்று தெரிவித்தார்.
இந்த, வக்கிரமான கருத்துக்கு பலதரப்பட்ட மக்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விடுத்துள்ள கண்டன அறிவிப்பில்,"விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மனிதர்களா இவர்கள்? தயவுசெய்து, இவரை கண்டுபிடித்து சிறையில் அடைக்கவும் என்று திமுக் தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தெரிவித்தார்.
கொள்கையை கொள்கையால் தோற்கடிக்க வேண்டும். எந்தத் தமிழ் இனம் பாலியல் வல்லுறைவைப் பரிந்துரைக்கிறது. இதை எழுதியவன் முதலில் மனித இனத்திற்கே துரோகி. வக்கிரத்தில் வடிவமைக்கப்பட்ட மூளைக்கு சொந்தக்காரன் செய்துள்ள இப்பதிவு கடும் கிரிமினல் குற்றம் என்று தோழர் உ.வாசுகி தெரிவித்தார்.
பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பதிவில், " கருத்து வேறுபாடை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிங்களுக்கு support a நிக்கிறாங்க இந்த ஊர்ல. அரசியல் அதிகாரத்தில் உள்ள மக்கள் எதையும் மாற்றப் போவதில்லையா? ஒரு மனிதன், ஒரு குழந்தையை பொது வெளியில் பாலியல் வல்லுறவு மிரட்டல் விடுக்கின்றான். அவன் ஒரு குற்றவாளி" என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil