நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் அரசு உதவிப் பெறும் சரஸ்வதி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் நிறுவனர் முருகையன் காலமாகிவிட்டார்.
அவரின் மகன் அசோகன் பள்ளி முகவராகவும், மற்றொரு மகன் ரகுபதி தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்தனர். இந்த நிலையில் ரகுபதி மே 31ஆம் தேதி ஓய்வு பெற்றுவிட்டார்.
இதற்கிடையில் ரகுபதிக்கும் பள்ளியின் ஆசிரியர் கோதண்டபாணிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரகுபதி பள்ளியை மூடுவதாக அறிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் மாற்றுச்சான்றிதழை வாங்கிச் செல்ல அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளியை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து பள்ளி தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பள்ளியின் ஒட்டுக் கட்டடம் சேதப்படுத்தப்பட்டது. இதற்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், இயந்திரத்தின் ஓட்டுநர் பிரசாந்த், தேத்தாக்குடி அறிவுநிதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ரகுபதி, அசோகனை தேடிவருகின்றனர்.
வட்டார கல்வி அதிகாரி விமலா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“