தங்க கட்டி எனக் கூறி தங்கம் முலாம் பூசப்பட்ட காப்பர் கட்டியை 6 லட்சத்திற்கு விற்க முயன்ற இருவர் கைது செய்யயப்பட்டனர். தலைமறைவான ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சியைச் சேர்ந்த ஆயில் மில் ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருபவர் வேலுமணி. இதே மில்லில் கேரளாவைச் சேர்ந்த ஜெஹேய்ஷுல் என்பவர் பணிபுரிந்து வருகிறார். ஜெஹேய்ஷுல் மேற்பார்வையாளர் வேலுமணியிடம் தங்களிடம் அரை கிலோ எடையிலான தங்க கட்டி ஒன்று இருப்பதாகவும் மிக குறைவான விலைக்கு அந்த தங்க கட்டியை கொடுக்க தனது நண்பர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இதனை அடுத்து வேலுமணி தனது நண்பர் பாட்ஷா என்பவருடன் சேர்ந்து ஜெஹேய்ஷுலின் நண்பர் சம்சத் என்பவருடன் போனில் பேசி உள்ளார். அப்பொழுது சம்சத் தங்களிடம் தங்க கட்டி இருப்பதாகவும் அதை 6 லட்ச ரூபாய்க்கு கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதனை அடுத்து வேலுமணியும், பாட்ஷாவும் பணத்துடன் கோவை தொண்டாமுத்தூர் வந்து சம்சத் சொன்ன இடத்தில் காத்து இருந்தனர். சம்சத் வந்த பொழுது தங்களிடம் 6 லட்சம் ரூபாய் பணம் இல்லை எனவும் இரண்டு லட்சம் ரூபாய் தான் இருக்கிறது எனவும் தெரிவித்து உள்ளனர்.
இரண்டு லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு தங்களிடம் இருந்த தங்கக் கட்டியை வேலுமணியிடம் கொடுத்த உடனேயே , சம்சத் யாசின், அலி மற்றும் ஜெஹேய்ஷுல் ஆகிய மூன்று பேரும் ஓட்டம் பிடித்து உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த வேலுமணியும் , பாட்ஷாவும் விரட்டிச் சென்று அலி மற்றும் ஜெஹேய்ஷுல் ஆகிய இருவரையும் பிடித்தனர். சம்சத் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினார்.
அவர்களிடம் விசாரித்த பொழுது அது தங்க கட்டி கிடையாது எனவும், காப்பரால் செய்யப்பட்ட, தங்க முலாம் பூசப்பட்ட காப்பர் கட்டி என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து வேலுமணி இது தொடர்பாக தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலி தங்க கட்டி கொடுத்து மோசடி செய்ய முயன்ற இருவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சம்சத்தை தேடி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“