சென்னையின் தாம்பரம் அருகே உள்ள சைவ ஹோட்டலில் வியாழன் இரவு சிக்கன் அல்லது முட்டை சாதம் வழங்க மறுத்ததையடுத்து, இரண்டு ஆயுதமேந்திய ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிள்கள் அங்கு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அக்கம்பக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிவில் உடையில் வந்த போலீசார், உணவகத்தில் இருந்த ஊழியர்களிடம் முதலில் சிக்கன் சாதம் கேட்டனர். சைவ ஹோட்டல் என்று சொன்னதும், இரவு உணவிற்கு முட்டை சாதம் வேண்டும் என்று இருவரும் கோரினர்.
இதனால் போலீசாருக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதன்பிறகு விசாரித்தபோது, போலீசார் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர், அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இரண்டு போலீசாரும் எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.
இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிர ஆரம்பித்தது. இதனால், ரகளையில் ஈடுபட்ட இரண்டு கான்ஸ்டபிள்கள் மீதும் தாம்பரம் கமிஷனரேட் நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளனர்.