மோடி- ஜின்பிங் சந்திப்பு : நெருக்கத்தின் அடையாளமான மகாபலிபுரம் கடற்கரை
பஞ்ச் ரதத்தின் அருகில் அமர்ந்து தேங்காய் தண்ணீரைப் பருகிய காட்சி ஆயிரம் அர்த்தங்களையும், இந்தியா- சீனாவின் உறவுகளின் வரலாறுகளையும் தூசிதட்டி எழுப்புகிறது.
Modi Xi Informal Summit talks : bilateral relationship between india and China , India China in 21 century relationship
சுபாஜித் ராய், அருண் ஜனார்த்தனன், சவ்மியா அசோக்
Advertisment
வளர்ந்து வரும் வர்த்தக பற்றாக்குறை, காஷ்மீர் மனக்கசப்பு, எல்லை பதட்டம், பயங்கரவாதம் பற்றிய புரிதலில் குறைபாடு என இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பாதித்த/பாதிக்கும் விசயங்களை பேசுவதற்காக தமிழ்நாட்டின் கடலோர நகரமான மகாபலிபுரத்தின் கம்பீரமான ஏழாம் நூற்றாண்டு நினைவுச்சின்னங்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் நேற்று அமர்ந்தனர்.
பாரம்பரியமான தமிழ்நாடு உடையில் மோடியும், வெள்ளை சட்டை மற்றும் கருப்பு கால்சட்டையோடு சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், மாலைநேர வெயிலில் மகாபலிபுரத்தின் அடையாளமான பஞ்ச் ரதத்தின் அருகில் அமர்ந்து தேங்காய் தண்ணீரைப் பருகிய காட்சி ஆயிரம் அர்த்தங்களையும், இந்தியா- சீனாவின் உறவுகளின் வரலாறுகளையும் தூசிதட்டி எழுப்புகிறது.
பிரதமர் மோடி - ஜீ ஜிங்பின் சந்திப்பு
இந்தியா-சீனா உறவுகளின் நெருக்கத்தை ஆழம் பார்க்கும் நிகழ்வான ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நீக்கம் செய்தது தொடர்பாகவும் கண்டிப்பாய் நேற்று பேசியிருந்திருப்பார்கள். டோக்லாம் எல்லை பதட்டத்தின் பின்னணியில் எவ்வாறு சீனாவின் வுஹானில் முதல் முறைசாரா உச்சிமாநாடு நடைபெற்றதோ...... அதேபோன்று தான் காஷ்மீர் பிரச்சனையின் பின்னணியில் இந்த இரண்டாவது முறைசாரா உச்சிமாநாடு மாமலபுரத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நேற்று, மதியம் 2 மணியளவில் சென்னை வந்திறங்கிய சீன அதிபர் ஜீ ஜின்பிங் சாலை மார்க்கமாக மாமல்லபுரம் வந்தடைந்தார். பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்ததும், வங்காள விரிகுடாவை நோட்ட மிட்டபடியே உலங்கு வானூர்தி மூலம் மாமல்லபுரம்சென்றடைந்தார்.
அந்த சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் இரு தலைவர்களும் முறையாய் நேற்று மாலை ஐந்து மணியளவில் சந்தித்தனர். பிறகு, ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னவர்கள் எழுப்பிய கலை சிற்பத்தை வந்திருக்கும் சீனா அதிபருக்கு இந்தியப் பிரதமர் விளக்கிய விதம், உச்சரித்த வார்த்தைகள், முகபாவங்கள் எல்லாம் தமிழகத்திற்கே உரித்தான விருந்தோம்பலை பிரதிபலிப்பதாகவே இருந்தது.
முதலில், அர்ஜுனனின் தவத்தில் இருந்து அவர்களது பயணம் ஆரம்பித்து, கிருஷ்ணரின் பட்டர்பால் கடந்து, பஞ்ச் ரதத்தையும் அதன் கலை சிற்பங்களை உணர்ந்து, மாமால்லபுரம் கடற்கரை கோயிலை இறுதியாக வந்தடைந்தனர். கடற்கரை கோயிலிலுள்ள நினைவுச்சின்னங்களை, கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் சுற்றிப் பார்த்து விட்டு, 15 நிமிடங்கள் வரை பஞ்ச் ரதத்தில் அருகில் ஓய்வெடுத்து சென்றனர்.
இரவு உணவிற்கு முன்பு ஒரு கலாச்சார நிகழ்ச்சியையும் இரு தலைவர்கள் கண்டுகளித்தனர். பிறகு, 9.40 மணி வரை இரு தலைவர்களும் ஒரு முழுமையான பேச்சுவார்த்தையை நடத்தினார்கள் என்று இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே ஊடகங்களுக்கு விளக்கம் கொடுத்திருந்தார்.
சனிக்கிழமையான இன்றும் இரு தலைவர்கள் தாஜ் ஃபிஷர்மேன் கடலோர விடுதியில் டேங்கோ ஹாலில் சந்திக்க உள்ளனர். பிறகு, தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இரு தரப்பிலிருந்தும் அறிக்கைகள் அழுத்தப்படும்,
கூட்டு அறிக்கை அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எதுவும் எதிர்பார்க்கப் படாமல் இருந்தாலும், செய்தியாளர்களுக்கு விரிவுரை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், பெய்ஜிங்கில் அமைந்திருக்கும், இந்திய தூதரகம் சீன நாட்டினருக்கான தனது இ-விசா கொள்கையை மேலும் எளிதாக்கியுள்ளதாக அறிவித்தது. இந்த மாதம் முதல், “சீனர்கள் ஐந்து வருடத்திற்குள் பலமுறை இந்தியாவிற்கு வந்து செல்லும் இ-சுற்றுலா விசாவிற்கு வசதி செய்துள்ளது. இதற்கான விசா கட்டணம் 80 அமெரிக்க டாலராக இருக்கும் ”என்ற செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது . இரு நாடுகளுக்கிடையேயான மக்களிடம் கலாச்சார பரிமாற்றம் நடக்க ஒரு வாய்ப்பாகவும் , சுற்றுலா நோக்கங்களுக்காக இந்தியாவை ஒரு இடமாக தேர்வு செய்ய அதிகமான சீன சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் திட்டமாகவும் இந்த இ-சுற்றுலா விசா அமைந்துள்ளது.
முன்னதாக, சீனா அதிபர் ஜீ ஜின்பிங் தரையிறங்கியபோது, விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு, தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித், முதலமைச்சர் கே பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக சபாநாயகர் பி. தனபால் ஆகியோர் வரவேற்றனர்.
சுமார் 500 தமிழ் நாட்டுப்புற கலைஞர்கள் “தப்பட்டம்,” மற்றும் “பொய் கால் குதிரை” உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். இவர்களுக்கு ஜீ ஜின்பிங் கொடுத்த சிரிப்பு, ஊக்குவிப்பு , ஒட்டுமொத்த தமிழர்களின் கவனத்தையும் ஈர்த்தது. சாலை மார்க்கமாக மாமல்லபுரம் வந்த அதிபரை , சீன மற்றும் இந்தியக் கொடிகளை அசைத்து பள்ளி மாணவர்கள் வரவேற்ற விதம் நமது ஞாபாகங்களில் இருந்து மறக்க சில நாட்கள் ஆகும் என்றால், அது மிகையாகாது.
நேற்று மோடி ட்விட்டரில் : “சென்னையில் தரையிறங்கிவிட்டேன். அற்புதமான கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழகத்தின் நிலத்தில் நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்… அதிபர் ஜீ ஜின்பிங்கை வருகையை தமிழகம் நடத்துவதில் மகிழ்ச்சி. இந்த முறைசாரா உச்சி மாநாடு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தட்டும்” என்று பதிவு செய்துள்ளார்.
உச்சிமாநாடு நடப்பதற்கு முன்னதாக, போராட்டம் நடத்திய 50 க்கும் மேற்பட்ட திபெத்திய இளைஞர்களை போலிசார் தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.