தஞ்சாவூரில் அரசு டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை அருந்திய 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் கீழவாசல் படைவெட்டி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (68). மீன் வியாபாரி. இவர் நேற்று காலை 11 மணியளவில் மீன் மார்க்கெட் எதிரில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றார். ஆனால், மதியம் 12 மணிக்குதான் மதுக்கடை திறக்கும் என்பதால், அதன் அருகில் செயல்படும் பாருக்குச் சென்று அங்கு சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை வாங்கி அருந்திவிட்டு, மீன் மார்க்கெட்டுக்கு வியாபாரம் செய்யச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் திடீரென வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி காஞ்சனா தேவி மற்றும் உடன் இருந்தவர்கள் அவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதேபோல் தஞ்சாவூர் பூமான் ராவுத்தன் கோயில் தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநரான குட்டி விவேக் (36) என்பவரும், அதே பாருக்குச் சென்று மது அருந்தியுள்ளார். அவரும் மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். பாரில் மது அருந்திய 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் பாரை முற்றுகையிட்டு பாரை மூடக் கோரி முழக்கமிட்டனர். அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி ஆஷிஷ் ராவத், டாஸ்மாக் வட்டாட்சியர் தங்கபிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து டாஸ்மாக் கடை மற்றும் பார் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பார் உரிமையாளரான காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் பழனிவேல் , ஊழியர் காமராஜ் ஆகியோரை தஞ்சாவூர் கிழக்கு போலீசார் கைது செய்தனர். சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், “உயிரிழந்தவர்கள் அருந்திய மதுபானத்தில் சயனைடு கலந்திருந்தது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இருவர் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக இது நடைபெற்றதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் சிறப்பு குழு அமைத்து விசாரித்து வருகிறோம்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“