உதகமண்டலம் அருகே கோவில் திருவிழாவின்போது, ஜெனரேட்டரில் இருந்து வெளியேறும் புகையை சுவாசித்த இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் அருகே உள்ள ஷோலூர் ஓராடி கிராமத்தில் கோவில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு மின்சாரம் தடைபெற்றதையடுத்து, ஜெனரேட்டர் இயக்குவதற்காக 5 பேர் ஜெனரேட்டர் வைத்திருந்த அறைக்குச் சென்றுள்ளனர். ஜெனரேட்டரை இயங்க வைத்துவிட்டு அந்த ஐந்து பேரும், அந்த மூடிய அறையில் தூங்கியுள்ளனர்.
அடுத்த நாளான சனிக்கிழமை அதிகாலையில், கிராம மக்கள் அந்த ஜெனரேட்டர் அறைக்குள் சென்று பார்த்தப்போது ஐந்து பேரும் மயக்கத்தில் கிடந்துள்ளனர். அவர்களை கிராம மக்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அதில் 2 பேர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் 3 பேருக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கிராமத்தில் மின்வெட்டு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரவில் ஓடிக்கொண்டிருந்த மின் ஜெனரேட்டரில் இருந்து வெளியேறும் புகையை சுவாசித்ததால் இரண்டு பேர் உயிரிழந்ததாக சனிக்கிழமை தெரிவித்தனர். இது தொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil