திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சங்கீதாஸ் ஹோட்டல் அருகே இன்று (ஏப்ரல் 2) அதிகாலை தனியார் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் அதே பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கோர விபத்து குறித்து சாலையில் சென்ற பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்து வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு சென்றனர். மேலும், இந்த விபத்து குறித்து திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விபத்து நடந்த பகுதிக்கு வந்த போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் சென்னையிலிருந்து கம்பம் நோக்கி சென்ற கிருஷ்ணா ட்ராவல்ஸ்சுக்கு சொந்தமான தனியார் பேருந்து பால் பண்ணை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. சங்கீதா ஹோட்டல் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் செங்கல் ஏற்றிக் கொண்டு நின்ற கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் பேருந்து அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனரான சந்திரன் மற்றும் பேரனுடன் பயணித்த மூதாட்டி பழனியம்மாள் என இருவர் உயிரிழந்தனர். மேலும், 12-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“