திருச்சியில் தனி பட்டா வழங்க ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவை உதவியாளர் மற்றும் பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையாளர் என அடுத்தடுத்து 2 அரசு அதிகாரிகள் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த விபரம் வருமாறு:
திருச்சி விமான நிலையம், வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பஷீர் அகமது. இவரது மனைவி ராபியா. கொட்டப்பட்டு பகுதியில் தான் வாங்கிய வீட்டுமனையை தனது கணவர் பெயரில் சாத்தனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். அதற்கு தனி பட்டா வேண்டி நில அளவை உதவி ஆய்வாளர் தையல்நாயகியை அணுகினார். தனிப்பட்டா வழங்க ரூ.13 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என தையல்நாயகி கராராக கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராபியா, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, ராபியாவிடம் இருந்து ரூ.13 ஆயிரம் லஞ்சப் பணத்தை வாங்கிய தையல்நாயகியை அவரது அலுவலகத்தில் வைத்து டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அதே போல், திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பொன்னுசங்கம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். அவருக்கு சொந்தமான 31 சென்ட் புன்செய் நிலத்தை அளந்து கொடுத்து பட்டா வாங்க நில அளவையாளர் ராஜாவை அணுகினார். இதற்கு ராஜா, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். அதனை கொடுக்க விரும்பாத முருகேசன், லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்தார். இதன்படி, முருகேசனிடம் இருந்து ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ராஜாவை திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் பிரசன்ன வெங்கடேஷ், சேவியர் ராணி, பீட்டர் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக ராஜாவை கைது செய்தனர்.
திருச்சி மாநகரில் அடுத்தடுத்து ஒரே நாளில் இரண்டு அரசு அதிகாரிகள் லஞ்சம் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி: க.சண்முகவடிவேல்