சென்னை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு உட்பட்ட செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் அண்மையில் விபத்து தொடர்பாக வழக்கு ஒன்றைப் பதிவு செய்திருந்தனர். விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு பெற்றுக் கொடுப்பது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் வழக்கறிஞர்கள் சிலர் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழக்கை மற்றொரு வழக்கறிஞரிடம் கைமாற்றிவிடுவதற்கான பேச்சுவார்த்தை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை திடீரென வாக்குவாதமாக மாறி, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 15-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், இரு தரப்பாகப் பிரிந்து பிளாஸ்டிக் நாற்காலிகளால் பலமாகத் தாக்கிக் கொண்டனர்.
இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்து எழும்பூர் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து மோதலை விலக்கி விட்டனர். மேலும், தாக்குதல் தொடர்பாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். ஆனால், 'போலீசார் இதில் தலையிட வேண்டாம், நாங்களே பேசிக்கொள்கிறோம்' என வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர்.
இந்த தாக்குதலில் 4 வழக்கறிஞர்கள் காயமடைந்ததாகவும், காயமடைந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜயகுமார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும், வழக்கறிஞர்கள் செந்தில்நாதன், சக்திவேல் ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.
இதற்கிடையே, வழக்கறிஞர்கள் மோதிக்கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகிய நிலையில், இதை அடிப்படையாக வைத்து இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு தலைமைப் பெருநகர மாஜிஸ்திரேட் என்.கோதண்டராஜ் உத்தரவிட்டுள்ளார்.
Scenes from The Honourable Egmore Court, Chennai. Perhaps now, the Honourable Judges will order Govt Ortho drs at courts now. pic.twitter.com/KRCSchVabf
— Dr Jaison Philip. M.S., MCh (@Jasonphilip8) July 20, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.