பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சபரிநாத் (40). இவர் சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அண்மையில் இவரது மனைவி உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து இவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். விடுமுறை நாட்களில் அவ்வப்போது பொள்ளாச்சி வந்து தங்கி சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று(மார்ச் 9) காலை ஆய்வாளர் சபரிநாத் வீட்டில் இருந்தபோது, அவரது கீழ் வீட்டில் குடியிருந்து வந்த 37 வயதான சாந்தி சமையல் செய்வதற்காக சபரிநாத் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டதும் கீழ் வீட்டில் குடியிருக்கும் சாந்தியின் உறவினர்கள் மேலே சென்று பார்த்த போது, சபரிநாத் மற்றும் சாந்தி இருவரும் தீயில் சிக்கிக் இருந்து கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக தீயணைப்பு துறைக்கும், பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு வீரர்கள் மற்றும் போலீசார் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், காவல்துறை ஆய்வாளர் சபரிநாத் மற்றும் சாந்தி இருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக போலீசார் வீட்டில் ஆய்வில் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் , பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை