காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலால், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 2 ஜோதி யாத்திரை டெல்லிக்கு புறப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 20ம் தேதி தோறும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. ராஜிவ் காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவகத்தில் இருந்து புதுடெல்லிக்கு, ஜோதி யாத்திரை புறப்படும்.
அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை ராஜிவ் காந்தி நினைவகம் முன், ஜோதி யாத்திரையை துவக்கினார். பல மாநிலங்கள் வழியாக பயணித்து 19ம் தேதி புதுடெல்லியில் சோனியா, ராகுலிடம் ஜோதி ஒப்படைக்கப்படுகிறது.
இந்நிலையில், வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சாமுவேல் திரவியம் தலைமையில், மற்றொரு ஜோதி புறப்பாடு, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து புறப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி எம்.பி., விஜய்வசந்த் பங்கேற்று, ஜோதி யாத்திரையை துவக்கி வைத்தார். ஸ்ரீபெரும்பெதூரில் இருந்து ஆண்டுதோறும் ஒரு ஜோதி மட்டுமே டெல்லிக்கு புறப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, காங்கிரஸ் கட்சியினரின் கோஷ்டி மோதலால், முதல் முறையாக 2 ஜோதிகள் புறப்பட்டுள்ளன.
இந்த ஜோதி ஆகஸ்ட் 19ம் தேதி புதுடெல்லியை சென்றடையும் இந்த இரண்டு ஜோதியில், எந்த ஜோதியை சோனியா, ராகுல் காந்தி வாங்குவார்கள் என்பது, தொண்டர்களிடேயே எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”