இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த வழக்கு விசாரணை 13ம் தேதிக்குப் பதிலாக 16ம் தேதி நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
அ.இ.அ.தி.மு.க. பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அதன் பின்னர் அதிமுகவில் யார் பொது செயலாளர் என்பதில் பிரச்னை ஏற்பட்டது. ஜெயலலிதா இறந்த போது, தற்காலிக முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை, முதல் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு சசிகலா தரப்பில் சொல்லப்பட்டது. அதை அடுத்து சசிகலாவே கட்சியின் பொது செயலாளராகவும், முதல்வராகவும் தேர்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா சமாதியில் மவுன விரதம் இருந்தார். பின்னர் சசிகலா குடும்பத்தினர், தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சொன்னதாக பேட்டியளித்தார். இதையடுத்து, கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அவர் பின்னால் அணி வகுத்தனர். அவருடன் 11 எம்.எல்.ஏ.க்கள் திரண்டனர். இதையடுத்து, அதிமுக தங்களுக்குத்தான் சொந்தம் என்று ஓபிஎஸ் தரப்பு.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றதால், முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமியும், கட்சியின் துணைப் பொதுசெயலாளராக டிடிவி தினகரனையும் சசிகலா நியமித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, டிடிவி தினகரன் போட்டியிட்டார். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் வந்தது. இதையடுத்து தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸும் இணைந்தனர். டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்று அறிவித்தனர்.
இதையடுத்து டிடிவி தினகரன் ஒரணியாகவும், ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஓரணியாகவும் இரட்டை இலை சின்னத்துக்கு சொந்தம் கொண்டாடினார்கள். சென்னை மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை, அக்டோபர் 31ம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த விசாரணையை கடந்த 6ம் தேதி தேர்தல் கமிஷன் தொடங்கியது. டிடிவி தினகரன் தரப்பில், கூடுதல் ஆவணங்கள் சமர்பிக்க அவகாசம் கேட்டனர். இதையடுத்து வழக்கு அக்டோபர் 13ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இந்நிலையில் தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை வரும் 16ம் தேதி மாலை 3 மணிக்கு விசாரிக்கப்படும்’ என தெரிவித்துள்ளது.
முன்பு வந்த செய்தி