இரட்டை இலை சின்னம் வழக்கை விரைந்து முடிக்க அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இரட்டை இலை சின்னம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முடக்கப்பட்டது. பின்னர் பலகட்ட விசாரணைக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனை எதிர்த்து டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் தற்போது நடந்து வருகிறது.
இரட்டை இலை வழக்கு இன்று (மே 21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது வழக்கு விசாரணையில் ஆஜரான துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர், ‘தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கை ஜூன் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்த வழக்கை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே விசாரணை வேகப்படுத்தப்படும் என தெரிகிறது.