செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் இரு நோயாளிகள் சிகிச்சை பலனின்றி நேற்று (புதன்கிழமை) உயிரிழந்ததையடுத்து, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச் சாராய வழக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கடந்த 13-ம் தேதி அளவில் பலர் கள்ளச் சாராயம் அருந்தியுள்ளனர். கள்ளச் சாராயம் அருந்திய நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விரைந்தார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இச்சம்பவத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர் சஸ்பெண்ட், பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச் சாராயம் அல்ல என்றும், தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் சேர்க்கப்பட்ட விஷச் சாராயம் என்றும் காவல் துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்தார். இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“