மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட தத்தங்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிகுருநாதன். இவர் மங்கைநல்லூர் மெயின்ரோட்டில் கொள்ளம்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பூராசாமி என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் பட்டறையில் பழனிகுருநாதன், பூராசாமி இருவரும் பணி செய்து வந்துள்ளனர். இரவு அருகிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மதுவாங்கி வந்து குடித்து விட்டு பணியினை மேற்கொண்டு வந்த நிலையில் இருவருமே சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளனர். அவர்கள் வாங்கி வந்து அருந்திய டாஸ்மாக் மதுபாட்டில்களில் ஒன்றில் பாதி மதுவும், ஒரு பாட்டில் பிரிக்காமல் அப்படியே இருந்துள்ளது. இதையடுத்து இருவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளம்பட்டறையில் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் அரசு டாஸ்மாக் மதுபானம் குடித்த சிறிது நேரத்தில் உயிரிழந்த இருவருக்கும் குடும்பத்தில் எவ்வித பிரச்னையும் கிடையாது. இருவருக்கும் இணைநோய்கள் எதுவும் இல்லை. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், டாஸ்மாக் மதுபானத்தை குடித்ததால் தான் இருவரும் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டி காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அவர்கள் தெரிவிக்கையில், "வீட்டு வாசலில் உட்கார்ந்து எல்லோரிடமும் சந்தோஷமாகப் பேசிவிட்டுப் பட்டறைக்குச் சென்றவர்கள் இறந்து கிடந்திருக்கின்றனர். அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு வாய்ப்பே இல்லை. இரண்டு பேரும் டாஸ்மாக்கில் மது வாங்கிக் குடித்திருக்கின்றனர். அந்த மதுவில்தான் ஏதோ பாய்சன் இருந்திருக்கிறது. அதுவே இரண்டு பேர் இறப்புக்கும் காரணம். போலீஸார் இது குறித்து வெளிப்படையாக எதுவும் பேசாமல் மறைப்பது, எங்களுக்குச் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது" என்றனர்.
தஞ்சாவூரில் அரசு டாஸ்மாக் கடை அருகே இருந்த அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பாரில், கடை திறப்பதற்கு முன்பு மது வாங்கிக் குடித்த இருவர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்களின் இறப்புக்கு மதுவில் சயனைடு கலந்திருந்தே காரணம் எனச் சொல்லப்பட்டது. தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், இரண்டு பேரின் இறப்புக்கான காரணத்தை போலீஸாரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மயிலாடுதுறையில் டாஸ்மாக்கில் மது வாங்கிக் குடித்துவிட்டு, இரண்டு பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மதுவில் பாய்சன் இருந்ததே அவர்களின் இறப்புக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுஅருந்தி 2 பேர் இறந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக மயிலாடுதுறையில் 2 பேர் டாஸ்மாக் மது வாங்கிக் குடித்து இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. மயிலாடுதுறையில் இறந்த 2 பேரும் டாஸ்மாக் மதுபானம் குடித்ததில் இறந்தார்களா அல்லது வேறு காரணமா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், டாஸ்மாக் மரணங்கள் தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “மயிலாடுதுறை அருகே, டாஸ்மாக் மது அருந்தியதால், மீண்டும் இருவர் மரணம் அடைந்துள்ளதாக நாளிதழில் வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சாராயத்தால் ஏற்படும் மரணங்களுக்கு ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் தமிழக அரசு, இம்முறை என்ன காரணத்தைச் சொல்லப் போகிறது?
பொதுமக்களின் உயிருக்குச் சிறிதும் மதிப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுகிறது. குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுப்பது போல் நடித்ததன் விளைவு, மீண்டும் இரு உயிர்கள். உடனடியாக, சம்பந்தப்பட்ட மது ஆலையை மூட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் அந்த ஆலையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள மது பாட்டில்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், மக்கள் உயிரைப் பற்றிக் கவலையில்லாமல், பத்து ரூபாய் வசூலில் மட்டுமே குறியாக இருக்கும் துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அண்மையில் தமிழ்நாட்டில் கள்ளச்சாரயம் அருந்தி 15க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அதேபோல், டாஸ்மாக் மதுவை குடித்து தஞ்சையில் இரண்டு பேர் உயிரிழந்தனர். விசாரணையில் சயனைட் கலந்த மதுவை அவர்கள் குடித்ததாக தெரியவந்தது.
அதேபோல், தனது ஆசை அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என கடிதம் எழுதி வைத்து விட்டு சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அடுத்தடுத்த மரணங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.