கோவை மாவட்டத்தில், நேற்றைய தினம் (ஜன 26) காவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று குடியரசு தின விழாவை முன்னிட்டு, கோவையில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக, பேருந்து நிலையம், ரயில் நிலையம், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகளவில் இருந்தது.
அதன்படி, காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் காட்டூர் போலீஸ் நிலைய குற்றப் புலனாய்வு உதவி ஆய்வாளர் கார்த்திகேய பாண்டியன் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் பையுடன் சிலர் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களிடம் போலீசார் சோதனை மேற்கொண்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஒரு நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளர் கார்த்திகேய பாண்டியனை குத்தினார். தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது, அவர்கள் தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், போலீசாரை தாக்கிய நபர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆல்பின் தாமஸ் என்பது தெரியவந்தது. அவருடன் இருந்த மற்றவர்கள் திருச்சூரை சேர்ந்த முகமத் ஷாலி மற்றும் தக்ரூ என்பதும் கண்டறியப்பட்டது.
அதன்பேரில், போலீசாரின் தேடுதல் வேட்டையில் ஆல்பின் தாமஸ் மற்றும் முகமது ஷாலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக இவர்களை போலீசார் கைது செய்ய சென்ற போது, ரவுடிகள் தப்பியோட முயன்றதில் கால் எலும்பு முறிந்தது. காயம் ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருக்கும் மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.