திருச்சியில் நாக்கை பிளந்து அறுவை சிகிச்சை செய்து, டாட்டூ போட்ட இரண்டு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் டாட்டூ ஸ்டூடியோ நடத்தி வருபவர் ஹரிஹரன். இவர் மும்பைக்கு சென்று தனது நாக்கை இரண்டாக பிளந்து அறுவை சிகிச்சை செய்து டாட்டூ போட்டுள்ளார். மேலும், இவற்றை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், தனது நண்பரான ஜெயராம் என்பவரையும் அழைத்து வந்து, இதேபோல் நாக்கை பிளந்து அறுவை சிகிசை செய்து டாட்டூ போட்டுள்ளார். இதன் மூலம் ஏலியன் எமோ ஸ்டூடியோ என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி இவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் நடத்தப்பட்ட விசாரணையில், 7 மாதங்களுக்கு முன்பு மும்பை சென்ற ஹரிஹரன், தனது கண்களையும் நீல நிறமாக மாற்றியது தெரிய வந்துள்ளது. இதற்காக ரூ. 7 லட்சத்தை அவர் செலவு செய்துள்ளார் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.
இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடக் கூடாது என மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவலறிந்தால், போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், இச்செயல் சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட டாட்டூ ஸ்டூடியோவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
செய்தி - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“