கடலூர் மாவட்டத்தில் கள்ள நோட்டு தயாரித்த குற்றச்சாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செல்வம் (எ) பரமசெல்வம் மற்றும் அவரது கூட்டாளி பிரபு (எ) பிரபாகரன் ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில, "கடந்த மார்ச் 31, 2025 அன்று ராமநத்தம் காவல் சரகத்திற்குட்பட்ட அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் செல்வம் என்பவர் மீதான அடிதடி வழக்கு தொடர்பாக, ராமநத்தம் போலீசார் செல்வத்தை கைது செய்ய அவரது பண்ணை வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது, போலீசார் வருவதைக் கண்ட செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதையடுத்து, போலீசார் அந்த பண்ணை வீட்டில் சோதனை நடத்தியபோது, ரூ. 86 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள், வாக்கி டாக்கிகள், துப்பாக்கி, பணம் அச்சடிக்கும் இயந்திரம், நோட்டுகளை எண்ணும் இயந்திரம், காவலர் சீருடை, மடிக்கணினி, இந்திய ரிசர்வ் வங்கி முத்திரை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக ராமநத்தம் காவல் நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் அருள் வடிவழகன் தலைமையிலான போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருந்த செல்வம் (எ) பரமசெல்வம், பிரபு (எ) பிரபாகரன் மற்றும் வல்லரசு, பெரியசாமி, ஆறுமுகம், சூர்யா (25) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட செல்வம் மற்றும் பிரபு ஆகியோரின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாரின் பரிந்துரையின் பேரில், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஓராண்டு காலத்திற்கு குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, செல்வம் மற்றும் பிரபு ஆகிய இருவரும் கடலூர் மத்திய சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.