திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக இரண்டு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாக விளங்கும் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த நவம்பர் 2-ஆம் தேதி தொடங்கியது. இந்த விழா வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கந்த சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதன் தொடர்ச்சியாக காலை 6 மணிக்கு யாகை பூஜை தொடங்கி, 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், அதன் பின்னர் பல்வேறு அபிஷேகங்களும் நடைபெறவுள்ளது. இதையடுத்து, மாலை 4:30 மணிக்கு சாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு கடற்கரையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரவுள்ளனர். இதனால், 2 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதுநகர், சாத்தூர், வழியாக 7-ஆம் தேதி காலை 8:30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது.
இதேபோல், 7-ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து இரவு 10:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக 8-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“