scorecardresearch

நீதிபதியிடம் தரிசன டிக்கெட் முறைகேடு.. வடபழனி கோயில் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், வடபழனி முருகன் கோயிலுக்கு சென்ற போது தரிசன டிக்கெட்டுக்கான தொகை செலுத்தியும் தவறான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக புகார் தெரிவித்தையடுத்து, கோயில் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நீதிபதியிடம் தரிசன டிக்கெட் முறைகேடு.. வடபழனி கோயில் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடந்த சனிக்கிழமை வடபழனி முருகன் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். தனது நீதிபதி அந்தஸ்தை பயன்படுத்தி விஐபி தரிசனம் செய்ய விரும்பாத நீதிபதி, சாதாரண சிறப்பு தரிசன கட்டணத்தில் தரிசனம் செய்ய விரும்பியுள்ளார். 3 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளைப் பெற நீதிபதி ரூ.150 (தலா ரூ.50) கட்டண வசூல் செய்யும் கோயில் ஊழியரிடம் கொடுத்துள்ளார். ஆனால் ஊழியர் அவரிடம் இரண்டு 50 ரூபாய்க்கான டிக்கெட்டையும், ஒரு 5 ரூபாய்க்கான டிக்கெட்டையும் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கோயில் ஊழியரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அவர் முறையாக பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து, அவர் புகார் அளித்தார். நீதிபதியின் புகாரைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) உயர் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்து 2 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். டிக்கெட் வழங்கிய பெண், டிக்கெட் பெற்று கோயில் உள் அனுமதித்த நபர் என 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கமாக கவுன்டரில் டிக்கெட் வழங்கும் நபர் விடுமுறையில் இருந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் 3 நாட்கள் டிக்கெட் வழங்கியுள்ளார். கோயிலில் வழங்கப்படும் அர்ச்சனா டிக்கெட் மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட் இரண்டும் ஒரே நிறத்தில் உள்ளன. இனி வரும் காலங்களில் இதுபோன்ற குழப்பம் ஏற்படாமல் இருக்க சிறப்பு தரிசனத்திற்கு என தனி கவுண்டர் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில், கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட மற்ற கோவில்களிலும் சிறப்பு தரிசனத்திற்கு என தனி டிக்கெட் கவுன்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Two staff members of chennais vadapalani andavar temple placed under suspension after judge complains

Best of Express