புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு மதுபானம் கடத்தி வந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே காவல் உதவி ஆய்வாளர் செல்வதுரை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த யசோதா மற்றும் சின்ன பாப்பா ஆகிய இருவரையும் பெண் போலீசார் உதவியுடன் சோதனை செய்தனர். இதில் அப்பெண்கள் இருவரும் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
அதனடிப்படையில், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்து 300 மதுபாட்டில்களை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் யசோதா மீது 21 வழக்குகளும், சின்ன பாப்பா மீது 12 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.