விழுப்புரம் மாவட்டம், கோண்டூர் கிராமத்தில் செப்டிக் டேங்க் (கழிவுநீர் தொட்டி) சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள கோண்டூர் கிராமத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான புதிதாகக் கட்டப்பட்ட வீட்டில் பன்படுத்தப்படாத இருந்த கழிவுநீர் தொட்டியை சீர் செய்யும் பணியைத் தொடங்கியுள்ளனர். அப்போது, கொத்தனார் ஐயப்பன் (37), மற்றும் மணிகண்டன் (35) ஆகியோர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள்ளேயே மயங்கி விழுந்தனர்.
கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த இருவரையும் ஜேசிபி இயந்திரம் கொண்டு உடைத்து மீட்டனர். இதையடுத்து, மூச்சு பேச்சின்றி இருந்த தொழிலாளிகள் 2 பேரையும் மீட்டு விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கே அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் 2 பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
விழுப்புரம் அருகே கோண்டூர் கிராமம் பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்டி வருகின்றனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"