மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2வயது குழந்தையை மீட்க தீயணைப்பு படைவீரர்கள் 11 மணிநேரத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த பிரத்யேக கருவி மூலம் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன் ஆகியோர் குழந்தை பத்திரமாக மீட்கப்படும் என்றும் குழந்தையை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் விரைகிறது. ஆழ்துளை கிணற்றுக்குள் விழந்த குழந்தையை மீட்க வேண்டும் என்று ராமதாஸ், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணியை மேற்கொள்வதற்கான ஐ.ஐ.டி அங்கீகாரம் பெற்ற ஐ.ஐ.டி தொழில்நுட்பவியலாளர்கள் நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் முயற்சி செய்தனர். 15 கிலோ எடைகொண்ட இந்த சாதனம் மூலம் குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியும், மைக் மூலம் பேசமுடியும். இதனை வெங்கடேஷ் தலைமையிலான குழு தயாரித்த கருவிக்கு 2013ஆம் ஆண்டில் ஐஐடி அங்கீகாரம் வழங்கியது.
ஐ.ஐ.டி குழுவினர் கொண்டுந்த சாதனம் ஆழ்துளை கிணற்றுக்குள் செலுத்தப்பட்டது. மீட்பு பணியின்போது குழந்தை 68 அடி ஆழத்துக்கு சென்றதால் மீட்பு பணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது.
நிகழ்வின் பின்னணி:
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில்,வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2வயது குழந்தை சுஜித் தோட்டத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் மாலை 5.40 மணிக்கு தவறி விழுந்தது. இதனை அறிந்த பெற்றோர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் குழந்தையை மீட்கும் பணியில் இறங்கினர்.
ஆனால், குழந்தையை மீட்பது எளிதானதாக இல்லை. 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 25 அடி ஆழத்தில் இருப்பதால் மீட்கும் பணி கடினமானது.
குழந்தையின் பெற்றோர்கள் தங்கள் தோட்டத்தில் அமைத்த ஆழ்துளை கிணறை அவர்கள் ஏற்கெனவே மூடியுள்ளனர். ஆனால், அண்மையில் பெய்த மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு ஆழ்துளை கிணறு திறந்துள்ளது. அதை யாரும் கவணிக்காத நிலையில் குழந்தை தவறி விழுந்துள்ளதாக நடுகாட்டுப்பட்டி கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.
தீயணைப்பு படையினர் ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு குழந்தையை மீட்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பள்ளம் தோண்டினர். ஆனால், 15 அடி ஆழத்தில் பாறை சிக்கியதால் மேலும் தோண்ட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த விஷயம் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தைப் பெற்றது. பலரும் குழந்தை உயிர் பிழைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டதை சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இதனால், டுவிட்டரில் சேவ் சுஜித் ஹேஷ்டேக்குடன் டிரெண்டானது.
இதனிடையே, திருச்சி மாவட்ட நிர்வாகம் குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தியது. மேலும், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட எஸ்.பி, வட்டாட்சியர் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்து குழந்தையை மீட்கும் பணியை பார்வையிட்டு, குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி தைரியமளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைக்கு சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் கிடைக்கிறதா என்றும் குழந்தை பயப்படாமல் இருக்க வெளிச்சமும் அளிக்கப்பட்டது. குழந்தைக்கு மருத்துவ உதவி அளிக்க மருத்துவக் குழுவும் வந்தடைந்தது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்காக மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த பிரத்யேக கருவியை வரவழைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஊடகங்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குழந்தை ஆழ்துளைக் கிணற்றுக்குள் நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவக் குழு தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார். மேலும், குழந்தையை இன்னும் 2 மணிநேரத்தில் மீட்கப்படும் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மதுரையிலிருந்து மணிகண்டன் பிரத்யேக கருவியுடன் இரவு 10 மணிக்கு வரவழைக்கப்பட்டார். ஒரு நீண்ட குழாயில் குழந்தையை பிரத்யேக கருவி மூலம் மீட்கும் பணி தீவிராமாக நடைபெற்றது.
இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த இடத்துக்கு சென்று மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தினார்.
ஆழ்துளைக்குள் விழுந்த குழந்தை சுஜித் குழிக்குள் சுயநினைவுடன் உள்ளது. குழந்தையின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் விரைவில் குழந்தையை மீட்டுவிடுவோம் என்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு நம்பிக்கை தெரிவித்தார்.
குழந்தை சுஜித்தின் தாய் குழந்தையிடம் “அழுகாத சாமி, அழுகாத.. அம்மா எப்படினாலும் உனைய மேல எடுத்துறேன் ” என்று தொடர்ந்து குழந்தைக்கு தன்நம்பிக்கை கொடுத்து வந்தார். குழந்தையின் தந்தை, சித்தப்பா மூலம் குழந்தையிடம் பேச்சுகொடுத்து குழந்தைக்கும் தைரியம் கொடுத்து வந்தனர்.
ஆழ்துளை கிணற்றுக்குள் அனுப்பப்பட்ட பிரத்யேக கருவி மூலம் குழந்தையின் ஒரு கையை கயிறு மூலம் கட்டப்பட்டது. மற்றொரு கையையும் கட்டினர். இதையடுத்து, கயிறை மேலே இழுக்கும்போது கயிறு குழந்தையின் கைகளில் இருந்து நழுவியது. அதனால், மீண்டும் குழந்தையின் கைகளில் கயிறு கட்டும் வேலை நடைபெற்றது. அதே நேரத்தில் குழந்தையின் சுவாசத்திற்கு ஆக்ஸிஜனும் செலுத்தப்பட்டது. குழந்தையின் நிலைமை மேலே ஒரு மானிட்டர் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே கோவையில் இருந்து மேலும் ஒரு மீட்புக் குழுவினர் குழந்தை சுஜித்தை மீட்பதற்கு வந்தனர். அவர்களும் குழந்தையை மீட்கும் பணியில் இணைந்து செயல்பட்டனர். ஆனால், அவர்களாலும் குழந்தையின் கைகளில் சுருக்கு போட்டு கயிறு கட்ட முடியாமல் திணறினர். ஈரப்பதம் காரணமாக ஒரு கையில் உறுதியாக கட்டப்பட்டிருந்த கயிறும் நழுவியது. எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் ஜேசிபி பொக்கலைன் இயந்திரங்களைக்கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது. மண் சரிவு ஏற்படும் என்று அந்த முயற்சியும் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, புதுக்கோட்டையிலிருந்து ஒரு குழுவினர் குழந்தையை மீட்க நடுக்காட்டுப்பட்டிக்கு வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.