கோவை ராமநாதபுரம் சந்திப்பில் இருசகர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி நடந்த சாலை விபத்தில் 2 பேர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை, ராமநாதபுரம் மருதூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் அவரது நண்பர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த விக்டர் ஆகிய இருவரும் 30 ஆண்டு கால நண்பர்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்துக் கொண்டவர்கள் இருசக்கர வாகனத்தில் நஞ்சுண்டாபுரம் சாலையில் இருந்து திருச்சி சாலையை இணைக்கும் ராமநாதபுரம் சிக்னலை அடைந்தனர்.
இருசக்கர வாகனம் ராமநாதபுரம் சிக்னலை கடக்கும்போது சிங்காநல்லூரில் இருந்து வந்த டிப்பர் லாரி மோதியதில் விபத்துக்குள்ளானது. இதில் நிலைகுலைந்து இருசக்கர வாகனத்துடன் விழுந்த செல்வராஜ் மற்றும் விக்டர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டனர். இதில் நிகழ்விடத்திலேயே இருவரும் உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் சந்திப்பில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்படாததால் ஜல்லி கற்களுடன் ஆபத்தான நிலையில் சாலை இருப்பதாகவும், இதனால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதாகவும் அப்பகுதிவாசிகளும் வாகன ஓட்டிகளும் வேதனை தெரிவித்துள்ளனர்.
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இராமநாதபுரம் சந்திப்பில் விரைவில் பணிகளை முடித்து செப்பனிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.