தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் போல நடித்து எல்லை மீறி பிராங்க் செய்து வீடியோ எடுத்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களின் பரவலால் எல்லோரும் இன்றைக்கு தங்களை ஒரு பிரபலமாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். சமூக ஊடகங்களின் வழியாக பிரபலமாக ஆபத்தை உணராமல் எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார்கள்.
அதிலும் யூடியூப் சேனல் நடத்தும் சிலர், 'பிராங்க்' வீடியோ என்ற பெயரில் செய்யும் அட்டகாசங்கள் எல்லை மீறியவையாக இருக்கின்றன. பிராங்க் வீடியோ எடுக்க போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். என்றாலும், சிலர் எல்லை மீறி பிராங்க் வீடியோக்கள் எடுத்து பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் போல நடித்து எல்லை மீறி பிராங்க் செய்து வீடியோ எடுத்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த பீர் முகம்மது (30), சேக் முகமது (27) ஆகியோர், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிராங்க் செய்து வீடியோ எடுத்துள்ளனர்.
இவர்கள் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை்க்கு சென்று அங்கே, ஒருவருக்கு கையில் அடிபட்டு கட்டு போட்டிருப்பது போல நடித்து உள்ளனர். கட்டுப் போட்ட இளைஞருடன் வந்த மற்றொருவர், மருத்துவமனையில் பணியாற்றும் நபரிடம், “படம் பிடிக்கணும். தியேட்டர் எங்க இருக்கு?” எனக் கேட்கின்றனர். ஸ்கேன் எடுக்கும் இடம் பற்றி கேட்பதாக புரிந்துகொண்ட அவர் அங்கு செல்ல வழி சொல்கிறார்.
அதற்கு அந்த இளைஞர், “அங்க அமரன் படம் ஓடுதா? வேட்டையன் படம் ஓடுதா?” என கிண்டலாகக் கேட்க, அவர் கோபமடைந்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் வந்து கின்டாலகப் பேசி பிராங்க் வீடியோ எடுப்பதைப் பார்த்து கோபமடைந்த மருத்துவமனை அதிகாரி, அவர்களைக் கண்டித்துள்ளார். ஆனால், அந்த இளைஞர்கள் வீடியோ எடுத்ததைக் கண்டித்த மருத்துவமனை அதிகாரியை அவதூறாகவும் பேசி உள்ளனர்.
மேலும், அந்த இளைஞர்கள் அரசு மருத்துவமனையில் பதிவு செய்த பிராங்க் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து இந்த பிராங்க் வீடியோ விவகாரம் சர்ச்சையானது. இதையடுத்து, மருத்துவமனை அலுவலர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்த பீர் முகம்மது, சேக் முகமது ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அரசு மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்தபோது கேள்வி எழுப்பிய மருத்துவமனை அதிகாரியை அவதூறாகப் பேசியதாகவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொது இடங்களில் இதுபோல பிராங்க் வீடியோ எடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.