ராணிப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக கைத்தறி மற்றும் துணை நூல் துறை அமைச்சர் காந்தி, கடந்த 21ம் தேதி சென்னைக்கு சென்றுவிட்டு மீண்டும் ராணிப்பேட்டைக்கு காரில் திரும்ப வந்து கொண்டிருந்துள்ளார். அமைச்சரின் கார் காவேரிப்பாக்கம் அருகே வந்துகொண்டிருந்தபோது அவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த செல்போன் அழைப்பில் மறுமுனையில் பேசிய 2 இளைஞர்கள், ராணிப்பேட்டையைச் சேர்ந்த சாமுவேல் என்பவர் தங்களுடைய வங்கியில் இருந்து கடன் பெற்றுள்ளதாகவும் அந்த கடனை நீங்கள்தான் பெற்றுத்தர வேண்டும் என்று அமைச்சரை அவமதிக்கும் வகையில் ஒருமையில் பேசியதாக தெரிகிறது.
இது தொடர்பாக, அமைச்சர் காந்தியின் உதவியாளர் ராஜசேகர் கடந்த 21-ம் தேதி காவேரிப்பாக்கம் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகார் மனுவின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவேரிப்பாக்கம் போலீசார், அமைச்சரை செல்போனில் ஒருமையில் பேசிய நபர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், அமைச்சர் காந்தியை செல்போனில் ஒருமையில் பேசியதாக சென்னையைச் சேர்ந்த கோகுல் மற்றும் பாலாஜி ஆகிய 2 இளைஞர்களை போலிசார் கைது செய்தனர். போலீசார் இந்த 2 இளைஞர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
அமைச்சர் காந்தியை செல்போனில் தொடர்புகொண்டு அவரை அமதிக்கும் வகையில் ஒருமையில் பேசிய சென்னையைச் சேர்ந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“