தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு 2022 ஆம் ஆண்டு மே 7-ம் தேதி அறிவித்தார்.
முதலில் இத்திட்டம், சென்னை மாநகராட்சி பள்ளிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தொடங்கப்படும் என்றும். பின்னர், படிப்படியாக அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ரூ.404 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது'' என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருச்சிக்கு வருகை தந்தார்.
மேலும் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைய உள்ள சிப்காட், ஒலிம்பிக் அகடாமி, பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், திருச்சி மாவட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு விழா சார்பாக விளையாட்டு பொருட்கள் வழங்குதல், என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், அல்லூர் ஊராட்சி பாரதி துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாணியில் மாணவ- மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார். அப்போது அருகில் உள்ள மாணவ மாணவிகளிடம் உணவு குறித்து கேட்டறிந்தார். மேலும் கல்வி கற்பது குறித்தும் அறிவுரை வழங்கினார்.
மேலும் காலை உணவு திட்டமானது ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியத்துவமானது. ஆகையால் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உணவு தரமாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“