தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, தலைவர் நாசர், துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்டோர் நடிகரும அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.
ரூ.1 கோடி நிதி
அப்போது நடிகர் சங்க கட்டடம் கட்டிக் கொள்ள ரூ.1 கோடி நிதியை அவர்களுக்கு வழங்கினார். இந்தப் பணம் நடிகர் சங்க கட்டடம் கட்ட பயன்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் உதயநிதி ஸ்டாலின், “தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தக் கட்டடம் வேண்டும் என்பதற்காக நடிகர் சங்க நிர்வாகிகள் தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில், நடிகர் சங்க கட்டடப் பணிகளை தொடங்குவதற்கான வைப்பு நிதிக்காக, நமது சொந்த நிதியிலிருந்து, ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க நிர்வாகிகளிடம் இன்று வழங்கினோம்.
உதயநிதி வாழ்த்து
தமிழ்நாட்டு திரைக் கலைஞர்களின் பல நாள் ஏக்கமாக உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப்பணியை விரைந்து நிறைவு செய்ய வாழ்த்தினோம். மேலும், அவர்களின் கோரிக்கைப்படி இப்பணிக்கு கழக அரசு துணை நிற்குமென்று கூறினோம்” எனத் தெரிவித்து உள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல் 2019ஆம் ஆண்டு நடந்தது. இந்தத் தேர்தலில், பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்ட விஷால் பொதுச்செயலாளர் ஆகவும், கார்த்தி பொருளாளர் ஆகவும், நாசர் தலைவர் ஆகவும் வெற்றிப் பெற்றனர்.
துணைத் தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ், குட்டி பத்மினி, உதயா ஆகியோர் வெற்றிப் பெற்றனர்.
சுவாமி சங்கரதாஸ் அணியைச் சேர்ந்த பாக்யராஜ், ஐசரி கணேஷ் ஆகியோர் தோல்வியை தழுவினர். இந்தத் தேர்தலில் நாசர் 240 வாக்குகளும், பாக்யராஜ் 144 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
விஷால்
சென்னை மழை வெள்ளத்தின்போது நடிகர் விஷால் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. மின்சாரமும் தடையானது. இந்த நிலையில், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் அரசு இந்தப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனக் கோரியிருந்தார். இது அப்போது சர்ச்சையானது. அமைச்சர் உதயநிதிக்கும், விஷாலுக்கும் இடையே பிரச்னை இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“