Tamil Nadu Budget | Udhayachandran IAS: 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்ட அரங்கில் பட்ஜெட் மதிப்பீடுகள் 2024-2025 (Budget Estimates 2024-2025) குறித்து நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், 2024-25 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.44 சதவீதமாக இருக்கும் என்றும், தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் பேசுகையில், "தேசிய பணவீக்கத்தை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது; நிதி பற்றாக்குறை 3.5% ஆக இருக்க வேண்டும்; அந்த வரம்பிற்குள் தமிழ்நாடு அரசு உள்ளது. தமிழ்நாட்டில் மோட்டார் வாகன விற்பனை சட்டம் மிகவும் திருப்திகரமாக உள்ளது, 4 சக்கர வாகன விற்பனை உயர்ந்துள்ளது. மகளிர் நலன் காக்க புதிய திட்டங்கள் தமிழ்நாடு பட்ஜெட்டில் உள்ளன.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொழிலாளர் பங்கேற்பில் பெண்கள் அதிகம் உள்ளனர். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாடு இளைஞர்கள் பணிபுரிவதை அதிகரிக்கும் வகையில் 1,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தமிழ்நாட்டின் பொருளாதார நிலை ஆரோக்கியமாக உள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரும் நிதிப்பகிர்வு, மானியம் குறைந்துகொண்டே வருகிறது.
2024 - 25 நிதியாண்டில் வரி அல்லாத வருவாய் ரூ.30,728 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரிஏய்ப்பை குறைத்து வரி வருவாயை அதிகரித்து வருகிறோம். 2024 - 25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் வரி வருவாய் ரூ.1.95 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்று தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“