விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தேர்தல் பிரசாரப் பயணத்தை திருக்குவளையில் தொடங்கிய உதயநிதியை போலிசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். உதயநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழகம் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்று திமுக தேர்தல் பிரசாரப் பயணத்தை அறிவித்தது. இதில், 15 தலைவர்கள், 75 நாட்கள், 1,500 கூட்டங்கள் 15,000 கி.மீ பயணம், 234 தொகுதிகளில் 500க்கு மேற்பட்ட உள்ளூர் நிகழ்வுகள் 10 லட்சம் நேரடி கலந்துரையாடல்கள் என்று மிகப் பெரிய அளவில் தேர்தல் பிரசாரப் பயணத்தை திமுக அறிவித்தது. அதன் முதல் கட்டமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்கினார். இந்த பிரசாரப் பயணத்தில் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுக பிரசரத்தை முடக்க அதிமுக அரசு முயற்சி செய்கிறது. போலீஸ் கெடுபிடி செய்தாலும் மக்களை சந்தித்தே தீருவேன். அதிமுக ஆட்சியின் கொள்ளைகளை மக்களிடம் எடுத்துச்சொல்வேன்” என்று கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே, பிரசாரப் பயணத்தை தடுக்கும் விதமாக அவரை போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க அரசியல் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பதால், திருக்குவளையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். உதயநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக தொண்டர்கள் காவல்துறையைக் கண்டித்தும் அதிமுக அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனர். காவல்துறையால் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏ பொய்யாமொழி உள்ளிட்ட திமுகவினர் திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
அடிமை அதிமுக-பாசிச பாஜகவுக்கு எதிராக மொத்த தமிழகமும் உள்ளது. அந்த உணர்வை ஒன்றுபட்டு ஒருங்கிணைக்க 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' பிரச்சார பயணத்தை திருக்குவளையில் இன்று தொடங்கினேன்.அதை முடக்க நினைத்து கைது செய்கின்றனர். எங்கள் உணர்வை அடக்க அடக்க வெகுண்டெழுவோம்-தமிழகம் மீட்போம்! pic.twitter.com/iyRAviMVkJ
— Udhay (@Udhaystalin) November 20, 2020
திருக்குவளையில் தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்கிய உதயநிதியை காவல் துறை கைது செய்ததைக் கண்டித்து, திருவாரூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம், மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி, தஞ்சாவூர், கோவை செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.