தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகிறார்.
தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமைந்ததில் இருந்தே தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று ஊகச் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்திருக்கிறது.
தி.மு.க அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, சேகர் பாபு, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலரும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை ஊடகங்களில் தெரிவித்து வந்தனர். ஆனால், அதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தனர்.
இதனால், உதயநிதி ஸ்டாலின் எப்போது அமைச்சராவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் மட்டுமல்ல தமிழக அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு மிக்க கேள்வியாக இருந்து வந்தது.
அண்மையில், உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் நீங்கள் அமைச்சராகப் போவதாக ஊகங்கள் வெளியாகிறது. அதனால், எப்போது அமைச்சராவீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி, “ஆமாம் நீங்களும் ஒன்றரை வருடமாக கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதை தலைவர்தான் முடிவு செய்வார்.” என்று கூறினார். அதே நேரத்தில், உதயநிதி இந்த கேள்விக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது கவனம் பெற்றது.
இந்த நிலையில்தான், உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உதயநிதி அமைச்சரவையில் இடம்பெறுவது உறுதியான பிறகு, அவருக்கு எந்த துறை அளிப்பது என்ற கேள்வி எழுந்தது. மற்ற அமைச்சர்கள் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று விரும்பினாலும், அவருக்கு எந்த இலாகாவை ஒதுக்குவது. உதயநிதிக்காக மற்ற அமைச்சர்களிடம் இருந்து முக்கிய இலாகாக்களை எடுத்து வழங்கினால் அது விமர்சனத்துக்குள்ளாகும். அதனால், தற்போது உதயநிதிக்கு முக்கியத்துவம் இல்லாத இலாகாவை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அமைச்சர் மெய்யநாதன் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை என இரண்டு இலாகாக்களுக்கு அமைச்சராக உள்ளார். இதில், விளையாட்டுத்துறையை உதயநிதிக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உதயநிதி எப்போது அமைச்சராவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த அவருடைய ஆதரவாளர்களுக்கு, டிசம்பர் 14ம் தேதி உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகிறார் என்ற செய்தி பொங்கல் பரிசாக வந்திருக்கிறது.
மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 14-ம் தேதி மேற்கொள்ள உள்ள அமைச்சரவை மாற்றத்தில் இலாகாக்கள் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொன் கிடைத்தாலும் புத்ன் கிடைக்காது என்பார்கள். அதன்படி, உதயநிதி டிசம்பர் 14-ம் தேதி புதன்கிழமை அமைச்சர் பதவியேற்பதற்கான நல்ல நாளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”