ஹாலிவுட்டில் 1994 ஆம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
உலக அளவில் ஏற்கெனவே பிரபலமான ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தை தழுவி பாலிவுட்டில், லால்சிங் சர்தா என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமீர்கான் நடித்துள்ள இந்த லால்சிங் சத்தா என்ற இந்திப் படம், தமிழ் மொழியிலும் வெளியாகிறது. இந்தப் படத்தின் தமிழ் பதிப்பை திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக, மாநிலத்தில் இந்தி எதிர்ப்பை வலியுறுத்தி வரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தி படமான அமீர்கான் நடித்துள்ள லால்சிங் சத்தா படத்தின் தமிழ் பதிப்பை வெளியிடுவது சர்ச்சையாகியுள்ளது.
உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், விக்ரம், டான் உள்ளிட்ட வெற்றிப் படங்களை வாங்கி வெளியிட்டுள்ளது. அந்த வகையில், அமீர்கான் நடித்துள்ள லால்சிங் சத்தா படத்தை வெளியிடுகிறது என்றாலும் திமுகவின் இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டால் சர்ச்சையானது.
இந்த நிலையில், லால்சிங் சத்தா படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அமீர்கான், உதயநிதி கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில், உதயநிதியிடம் இந்த சர்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “நாம் ஒரு 60 ஆண்டுகள் இந்தி எதிர்ப்பிலே வளர்ந்த மாநிலம், இந்தி தெரியாது போடா என்று சட்டை போடுவோம். பாணிப் பூரிக்காரர்களை எல்லாம் கிண்டல் செய்வோம். ஆனால், இந்தப் படத்தின் டிரெய்லரில் முக்கியமாக பாணிப்பூரிதான் வருகிறது. ரெட் ஜெயண்ட்டில் முதல் முதலா ஒரு இந்தி படத்தை ரிலீஸ் செய்கிறீர்கள். நிறைய விமர்சனங்கள் வரும். அதை எப்படி பார்க்கப்போகிறீர்கள். நிறைய விமர்சனங்கள் வரும், இந்த படத்தை ரிலீஸ் செய்யப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “நாம் எப்போதும் 'இந்தி திணிப்பை மட்டுமே எதிர்க்கிறோம். இந்தி மொழியி அல்ல” என்று விளக்கம் அளித்தார். அப்போது உதயநிதி கூறியதாவது: “எப்போதும் இந்தி தெரியாது போடா என்பது இந்தி திணிப்புக்குதான் எதிர்த்திருக்கிறோமே தவிர, ஒரு மொழியை கற்றுக்கொள்ளக் கூடாது என்று சொன்னதே கிடையாது. உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் கற்றுக்கொள்ளலாம். ஆனால், நீங்கள் இந்தி கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று சொன்னால், அதை எதிர்ப்பதுதான் திமுகவின் கொள்கை. இது முதல் இந்திப் படம். இதற்கு முன் தெலுங்கு படம் வெளியிட்டிருக்கிறோம். மொழியைத் தவிர அமிர்க்கான் நடிப்புக்கு நான் மிகப் பெரிய ரசிகன். அவருடைய படங்கள் எனக்கு ரொம்ப புடிக்கும். அவருடைய படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் அமெரிக்காவின் வரலாறு பின்னணியில் நடக்கும். அதே போல, இந்த படத்திலும் இந்தியாவின் வரலாறும் பின்னணியில் நடக்கும். இதில் எனக்கும் அமீர்கானுக்கும் இடையே ஒரு உரையாடலும் நடந்தது. இது எங்கே சரிவருமா என்றபோது அவர் என்னை பரிசீலனை செய்ய வைத்தார். நான் சொன்ன சில விஷயங்களை குறிப்பெடுத்துக்கொண்டு அவர்கள் சின்ன சின்ன விஷயங்களை மாற்றி இருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு தமிழ் பதிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் வெளியிடலாம் என்று கூறினேன். ஒரு ரசிகனின் தருணம் என்றுகூட இதை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு நடிகர் அமீர்கான், இயக்குனருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.