அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றிப் பெற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க நாணயம் பரிசு வழங்கினார்.
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று (17.01.2023) சிறப்பாக நடைபெற்று வருகிறது. 1000 காளைகள் மற்றும் 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்தோடு தழுவி வருகின்றனர். வெற்றிப் பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: ‘உதயநிதி அமைச்சர் ஆனதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி’: நேரில் சந்தித்த பிறகு மு.க அழகிரி பேட்டி
இந்தநிலையில், இன்றைய போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை விராலிமலை சட்டமன்ற உறுப்பிருமான விஜயபாஸ்கரின் வெள்ளைக் கொம்பன் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில் களம் இறங்கியது. இந்த மாட்டைப் பிடிப்பவர்களுக்கு பரிசாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி வழங்கும் தங்க நாணயம் பரிசு அறிவிக்கப்பட்டது.
வெள்ளைக் கொம்பன் வாடிவாசல் வழியாக சீறி பாய்ந்து வந்தது. காளையை யாரும் அடக்க முடியவில்லை. இதனையடுத்து மாட்டின் உரிமையாளரான விஜயபாஸ்கருக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது. முன்னதாக விஜயபாஸ்கர் மாடு என்று அறிவிக்கப்பட்டதும், அமைச்சர் உதயநிதி எழுந்து நின்று வெள்ளைக் கொம்பன் சீறி வருவதைப் பார்த்தார். இதேபோல் விஜயபாஸ்கரின் கருப்பன் மாடும் தங்க நாணயம் பரிசு பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil