திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் நடைபெற்ற 100-ம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
தொடர்ந்து விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது, "100-வது ஆண்டு விளையாட்டு போட்டிக்கு தகுதியான, சரியான நபரை தான் சிறப்பு விருந்தினராக நீங்கள் அழைத்து உள்ளீர்கள். இவர், நேற்று நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற அறப்போராட்டத்தில் எழுப்பிய உரையானது வரலாற்று சிறப்பு மிக்கதாகும். மனிதன் என்பர் தெய்வமாகலாம், மற்றவர்களுக்காக உழைப்பவன் தலைவனாகலாம் என்ற சொல்லுக்கு உகந்தவாறு செயல்பட்டார். தொடர்ந்து செயலாளராக இருந்தவர் இன்று எங்கள் தலைவனாக உள்ளார்.
மேலும் இவர் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேசமயம் பொது சேவை பணியில் தொடர்ந்து முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட மிக பெரிய போராளி தான் நம் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
பெண்கள் அதிக தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். வரும் ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தான் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். கலைஞர் உருவாக்கிய இந்த துறையை பேரன் உதயநிதி ஸ்டாலின் வளர்த்து வருகிறார். மேலும் விளையாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனை பெண்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உழைப்பாளி, போராளி, தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான். இந்த நிகழ்ச்சியில் எதிரே உள்ள மைதானம் எப்படி காலியாக உள்ளதோ, அதேபோன்று அமைச்சர் உதயநிதிக்கு எதிரி யாரும் இல்லை" என்று கூறினார்.
பெண்கள் முன்னேற்றத்திற்கு பல திட்டங்கள்
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "என்னை இங்கு ஸ்போர்ட்ஸ் டே என்று தான் அழைத்தார்கள், ஆனால் இங்கு வந்து பார்த்தால் கல்ச்சுரல்ஸ் டேவாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது. இதற்காக நீங்கள் அனைவரும் பலமுறை வகுப்பறையை கட் அடித்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். உங்களுடையதொடர் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த கலை நிகழ்ச்சியின் வெற்றி.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் என்னை மீண்டும் என்னுடைய கல்லூரி காலத்திற்கு அழைத்து சென்று அந்த நினைவுகளை ஞாபகப்படுத்தியது. திருச்சியில் நடைபெறக்கூடிய கல்லூரி நிகழ்ச்சியில் நிச்சயமாக நீ கலந்து கொள்ள வேண்டும், என உத்தரவிட்டு என்னை இங்கு அழைத்து வந்ததற்கு அன்பில் மகேஷ் அவர்களுக்கு நன்றி.
1924-ம் ஆண்டு கலைஞர் பிறந்தார். அவருக்கு ஓர் ஆண்டு முந்தையதாக இந்த கல்லூரி பிறந்தது. தொடர்ந்து திராவிட மாடல் கொள்கையை முழுமையாக இந்த கல்லூரி செயல்படுத்தி வருகிறது. பெண்கள் கல்வியை கண்டிப்பாக கற்க வேண்டும். இந்த சமுதாயத்தில் அவர்கள் தனித்து நிற்க வேண்டும் என மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து கூறிக் கொண்டே இருப்பார், அதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்தார்.
வீட்டில் குழம்பு கரண்டியை பிடித்த பெண்களிடம் கையில் புத்தகத்தை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. 100 ஆண்டுகள் தொடர்ந்து கல்வியை சேவை செய்வது சாதாரண விஷயம் இல்லை. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி அமுல்படுத்தினார்.
பெண்கள் அதிக அளவில் தொடர்ந்து படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கொள்கையில் கலைஞர் கருணாநிதி உறுதியாக இருந்தார். பெண்கள் ஒருபோதும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறிப்பாக வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் காலையில் எந்தவிதமான கஷ்டமும் படாமல் குழந்தைகளை பள்ளிக்கு தைரியமாக அனுப்புவதற்காக பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் என தொடர்ந்து பெண்கள் கல்விக்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் திமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக பெண்களால் தான் மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு விளையாட்டு துறையில் பெண்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக தற்போது விளையாட்டு துறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளனர். தமிழ்நாட்டில் தேசிய அளவிலான போட்டிகள், சர்வதேச அளவிலான போட்டிகளை தொடர்ந்து நாம் நடத்தி வருகிறோம்.
இதனை தொடர்ந்து ஒரு சில ஆண்டுகளில் சர்வதேச அளவிலான பல போட்டிகள் தமிழ்நாட்டில் விரைவில் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 6 ஆண்டிற்கு பிறகு ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், மகாபலிபுரத்தில் சறுக்கு அலை விளையாட்டு, முதல்வர் கோப்பை விளையாட்டு ஆகிய போட்டிகளை வெற்றிகரமாக தமிழக அரசு நடத்தியது. அடுத்த ஆண்டு கேலோ இந்தியா போட்டி தமிழகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மணிப்பூர் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. விளையாட்டுத் துறையில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு எப்போதும் நம்முடைய தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும்"எனப் பேசினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.