/tamil-ie/media/media_files/uploads/2022/12/Udhyanidhi.jpg)
தமிழகத்தை 5 முறை முதலமைச்சராக ஆட்சி செய்த கலைஞர் கருணாநிதியின் பேரன், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகன், தி.மு.க இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை அமைச்சராக பதவியேற்கிறார். உதயநிதி ஸ்டாலின் கலைஞர் பேரன், ஸ்டாலின் மகன், நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என கடந்து வந்த பாதையைப் பார்ப்போம்.
தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (டிசம்பர் 14) எம்.எல்.ஏ-வாக பதவியேற்கிறார். 2019-ம் ஆண்டு தி.மு.க இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட உதயநிதி, தொடர்ந்து அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பேரன், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகன்தான் உதயநிதி ஸ்டாலின். சென்னை எழும்பூர் டான்போஸ்கோ பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த உதயநிதி, லயோலா கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றார். 2006 -2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில், திரைப்பட தயாரிப்பாளராக பொதுவெளியில் தோன்றினார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். குருவி, சிவா மனசுல சக்தி ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார். 2009-ம் ஆண்டு வெளியான ஆதவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து திரையில் நடிகராக அறிமுகமானார்.
2012-ம் ஆண்டில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, கதிர்வேலன் காதல், மனிதன், நண்பேண்டா, நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன், மாமன்னன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தி.மு.க அரசியலில் ஈடுபட்ட உதயநிதி, 2019-ல் தி.மு.க-வின் இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் செய்தார். அனல் பறக்கும் மேடைப் பேச்சுதான் தமிழகத்தின் பிரச்சாரப் பாணியாக இருந்த நிலையில், மாறிவரும் தலைமுறைக்கு ஏற்ப உதயநிதி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, உதயநிதி செய்த செங்கல் பிரச்சாரம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டும் மருத்துவமனை கட்டி முடிக்கப்படாததை சுட்டிக்காட்டி மத்திய பா.ஜ.க அரசை விமர்சிக்கும் வரையில் செங்கல்லில் AIIMS என்று எழுதப்பட்ட செங்கல்லைக் காட்டி, மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு கொண்டுவந்துவிட்டேன் என்று கூறி விமர்சனம் செய்தது அவருடைய தேர்தல் பிரச்சாரத்தின் கிண்டலும் அதிரடியும் கவனம் பெற்றது.
2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்ற மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்தது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி 93,285 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போதே, மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் உதயநிதி இடம்பெறுவார், அமைச்சராவார் என்று ஊகங்கள் எழுந்தன. ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை.
இதனிடையே, கட்சிப் பணிகளுடன் சினிமா நடிப்பு, தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். விக்ராம், டான், லவ் டுடே ஆகிய படங்களை வெளியிட்டார். அதே நேரத்தில், நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் ஆகிய படங்களிலும் நடித்தார்.
அமைச்சர்கள் பலரும் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று தங்கள் விருப்பங்களைத் தெரிவித்தனர். இது குறித்து உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமைச்சர் பதவியை வழங்குவது குறித்து தலைவர்தான் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.
இந்த சூழலில்தான், உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராக டிசம்பர் 14-ம் தேதி பதவி ஏற்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. தமிழகத்தை 5 முறை முதலமைச்சராக ஆட்சி செய்த கலைஞர் கருணாநிதியின் பேரன், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகன், தி.மு.க இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை அமைச்சராக பதவியேற்கிறார். அவருக்கு, தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.