/tamil-ie/media/media_files/uploads/2021/12/Udhayanidhi-3.jpg)
உதயநிதி ஸ்டாலின்
திமுகவில் உள்ள அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, கே.என்.நேரு என பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புவதாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இதனால், அமைச்சரவையில் உதயநிதிக்கான இடம் உறுதியாகியுள்ள நிலையில் திமுகவில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. விதிகளின்படி 34 பேர் அமைச்சர்களாக உள்ளதால், அதில் ஒருவர் ராஜினாமா செய்தால்தான் உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க முடியும் என்பதால் தனது பதவியை தியாகம் செய்யும் அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சரவையில் இடம்பெறுவது என்பது இன்னும் ரகசியமாக உள்ளது. இருப்பினும், உதயநிதியை அமைச்சராக்குவதற்கு பொதுமக்களின் மனநிலை பெரிய அளவில் ஆதரவாக இல்லை என்பதும் தெரிகிறது.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நவம்பர் 27-ம் தேதி திமுகவினரால் மாநிலம் முழுவத்ம் கொண்டாடப்பட்டது. ஏழை எளியவர்களுக்கு உதவிகள் வழங்கி உதயநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள். உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி, திமுகவில் உள்ள அமைச்சர்கள் பலரும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதியின் நண்பரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ், பொதுமக்கள் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று உதயநிதிக்கான அமைச்சர் புரமோஷனை முதலில் வலியுறுத்தியவர். உதயநிதியை அடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் சேகர் பாபு மற்றும் மூத்த அமைச்சர் கே.என்.நேருவும் உதயநிதியை அமைச்சராக்க குரல் கொடுத்தனர்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், கே.என்.நேரு, உதயநிதிக்கு அமைச்சராக எல்லா தகுதியும் இருக்கிறு என்று கூறி மூத்த அமைச்சராக உதயநிதியின் புரமோஷனை வழிமொழிந்தார்.
ஒருவழியாக உதயநிதியின் அமைச்சர் புரமோஷன் திமுகவில் உறுதியாகி உள்ளது என்றாலும் இன்னொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால், உதயநிதிக்காக தனது பதவியை தியாகம் செய்யத் தயாராக இருக்கும் அமைச்சர் யார் என்பதுதான் அந்த கேள்வி.
அரசியலமைப்பு 91வது திருத்தச் சட்டம் 2003-ன் படி, மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள் குழுவில் முதலமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தின்படி, தமிழகத்தில் முதல்வர் உட்பட 34 அமைச்சர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
“தற்போதைய அமைச்சரவையில் முதலமைச்சர் மற்றும் அவருடன் 33 அமைச்சர்கள் உள்ளனர். அதனால், உதயநிதி அமைச்சரானால், எற்கெனவே பதவியில் இருக்கும் அமைச்சர்களில் ஒருவருக்கு, கடும் அதிர்ச்சி ஏற்படும். உதயநிதியை விரைவில் மாநில அமைச்சரவையில் சேர்க்க, தலைமை உறுதியாக உள்ளது. உதயநிதிக்கு பிரச்சாரம் செய்வதன் மூலம், அமைச்சர்கள் தலைமையின் குட் புக்கில் இருக்க விரும்புகிறார்கள். திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதிதான் என்று கருதும் அமைச்சர்கள் தங்கள் அமைச்சர் பதவிகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிப்பது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், “முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு, கட்சியில் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர் உதயநிதி என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. 2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் வெற்றி என்பது உதயநிதியின் வெற்றிகரமான பிரச்சாரம் மிகப் பெரிய காரணம். கட்சியின் வெற்றிக்குப் பிறகு அவருக்கு முதலில் இளைஞர் அணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் அதிமுக - பாஜக சுணக்கம் காட்டி வருவதை முன்னிறுத்தி உதயநிதி செய்த பிரச்சாரம் வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படிப்பட்ட உதயநிதிக்கு அமைச்சரவையில் பதவி வழங்குவதில் எந்த தவறும் இல்லை” என்று கூறினார்.
மற்றொரு திமுக நிர்வாகி கூறுகையில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்குப் பிறகு உதயநிதிக்கு அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக கூறினார். திமுகவில் முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக ஆனவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது புதிதல்ல. இந்த அமைச்சரவையிலும், அமைச்சர்கள் என்.கயல்விழி செல்வராஜ், எம்.மதிவாணன், எஸ்.எம்.நாசர் ஆகியோர் முதல் முறை எம்.எல்.ஏ.க்கள்தான். அனேகமாக, திமுகவின் திமுக உயர்மட்ட தலைவர்களின் எதிர்பார்ப்புபடி, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் முடிந்தவுடன் உதயநிதி அமைச்சராக்கப்படுவார். அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தனது துறைக்கான மானியக் கோரிக்கைகளை உதயநிதியே தாக்கல் செய்வார்” என்று கூறினார்.
இதன் மூலம், உதயநிதியின் அமைச்சர் பதவி உறுதியாகியுள்ளது. ஆனால், உதயநிதிக்காக தனது பதவியை தியாகம் செய்யப் போகும் அந்த அமைச்சர் யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அரசியலமைப்பின் 91வது திருத்தச் சட்டம் 2003-ன் படி, மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள் குழுவில் முதலமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். சட்டத்திருத்தத்தின்படி தமிழகத்திற்கு 34 அமைச்சர்கள் மட்டுமே இருக்க வேண்டும். இதனால், உதயநிதிக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்றால் யாராவது ஒரு அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். அப்போதுதான் உதயநிதி அமைச்சராக முடியும். அதனால், உதயநிதிக்காக தனது பதவியை தியாகம் செய்யப் போகிற அந்த அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.