தலைப்பாகை இல்லை; முத்திரியை ஏற்க வில்லை: சாமிதோப்பில் உதயநிதி சர்ச்சை
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி, சுவாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது, தலைப்பாகை அணியாமல், முத்திரியை ஏற்காதது சர்ச்சையாகி உள்ளது.
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி, சுவாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது, தலைப்பாகை அணியாமல், முத்திரியை ஏற்காதது சர்ச்சையாகி உள்ளது.
Advertisment
தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு சென்றார்.
உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி சென்றபோது, அவர் ஓய்வெடுக்க சென்ற அரசு விருந்தினர் மாளிகையில் தி.மு.க-வினர் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் உள்ள சுவாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமைப் பதிக்கு சென்று சிறப்பு சுவாமி தரிசனம் செய்தார். உதயநிதி ஸ்டாலின் அய்யா வைகுண்டர் பதியில் தரிசனம் செய்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியானது. அதில், அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் தரிசனம் செய்ய வருபவர்கள் சட்டை இல்லாமல், தலைப் பாகை அணிந்து, முத்திரி ஏற்று வணங்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், அந்த வீடியோவில், உதயநிதி தலைப்பாகை அணியாமல், முத்திரி ஏற்காமல் தரிசனம் செய்தது தெரியவந்தது. சிலர் இதைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை முத்து என்பவர் தனது முகநூல் பக்கத்தில், குறிப்பிடுகையில், “அய்யா உண்டு சர்வமும் வைகுண்ட மயம், நேற்று சாமிதோப்பு பதியில் நடந்த நிகழ்வு அய்யாவழிபாட்டு ஹிந்துக்களுக்கு ஒரு மிகப்பெரிய இழிவு எங்கள் வழிபாட்டு கட்டுப்பாடுகளை நீங்கள் ஏற்க தயாராக இல்லை அதிக கடைபிடிக்க தயாராக இல்லை என்றால் நீங்கள் எங்கள் வழிபாட்டு தலங்களுக்கு வரவே அவசியமில்லை. எங்கள் அப்பன் நாராயணன் எங்களுக்கு தந்த முத்திரியை நீங்கள் ஏற்கவில்லை அதை அணியவில்லை என்றால் எங்கள் வழிபாட்டு தலங்களுக்கு நீங்கள் வரவேண்டிய அவசியம் இல்லை.
யாரையும் கட்டாயப்படுத்தி வர சொல்லவில்லை. கருணாநிதி பேரனிடம் ஸ்டாலின் மகனிடம் திமுக வாரிசுகளிடம் ஹிந்துக்களின் மனதை புண்படுத்துவது மட்டுமே தொழிலாக கொண்டவர்களிடம் இதை தவிர வேறு எதை எதிர் பார்க்க முடியும்.
இதற்கெல்லாம் மேல் அந்த பதி நிர்வாகம் அய்யா சொன்னது போல அங்கு சொல்லப்பட்டது
"எளியவனுக்கு ஒரு வழக்கு வலியவனுக்கு ஒரு வழக்கு" இதையே சாமிதோப்பு நிர்வாகம் வேறு ஒருவருக்கு அனுமதி வழங்குமா?
எளியவன் யாராவது அங்கே தலைப்பாகை இல்லாமல் உள்ளே செல்ல முடியுமா?
"இச்சட்டம் தன்னில் எள்ளளவு தப்பினதால் தீச்சட்டம் காய்க்க தேதி வரும் என் மகனே"
உங்களுக்கு தீச்ட்டம் காய்க்க தேதி வந்தாகிவிட்டது. காசும் பணமும் அரசியலும் பதவியும் உங்கள் கண்ணை மறைக்கிறது.” என்று குறிபிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"