திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான உதயநிதி, அரசியல்வாதி, நடிகர், தயாரிப்பாளர் என பிஸியாக இருந்து வருகிறார். அதே நேரத்தில், தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, சிவகார்த்திகேயனின் டான் படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் திரையரங்க உரிமையை வாங்கியுள்ளது. உதயநிதி தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றி வருவதால் மற்ற தயாரிப்பாளர்கள் புலம்புவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கலைஞரின் பேரனும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், திமுகவின் இளைஞரணி செயலாளராகவும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் அரசியலில் பிஸியாக இருக்கிறார். அவர் விரைவில் ஸ்டாலின் அமைச்சரவையில் இணையலாம் என்று தினமும் ஊடகங்களில் ஆருடம் சொல்லி வருகின்றனர். அமைச்சர்கள் பலரும் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று தங்கள் விருப்பங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதி ஆரம்பத்தில் காதல் + நகைச்சுவை படங்களிலேயே நடித்து வந்தார். அதற்கு பிறகு, அவருடைய மனிதன் படத்தில் இருந்து உதயநிதியின் நடிப்பு அடுத்த கட்ட பரிணாமத்துக்கு சென்றது. அதன் பிறகு சைக்கோ, கண்ணே கலைமானே போன்ற படங்களில் தனது நடிப்பின் பரிணாமத்தை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனிடையே, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், மாமன்னன் படத்தில் உதயநிதி ஹிரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
அரசியல், நடிப்பு, சினிமா தயாரிப்பு என்று உதயநிதி பிஸியாக இருந்தாலும், உதயநிதி சினிமா வணிகத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போது முன்னணி ஹீரோக்கள் பலரின் படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் முன்னதாக, ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த, அஜித்தின் வலிமை ஆகிய படங்களின் திரையரங்க உரிமையை வாங்கி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம், விஜய்யின் பீஸ்ட் படங்களின் திரையரங்க உரிமையை பெற்றுள்ளது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இதன் மூலம் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயன் ஆகிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் திரையரங்க உரிமைகளை கைப்பற்றியுள்ளது. இதனால், முன்னணி ஹீரோக்களின் படம் என்றால் உதயநிதிதான் வாங்குகிறார் என்ற தோற்றம் உருவாகியுள்ளது. இதனால், மற்ற தயாரிப்பாளர்கள், முன்னணி ஹிரோக்கள் படங்களை எல்லாம் உதயநிதியே வாங்கினால், நாங்கள் எல்லாம் என்ன செய்வது என்ற புலம்பத் தொடங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், உதய நிதி ஒரு சினிமா தயாரிப்பாளராக இந்த படங்களை வாங்கி வெளியிடுகிறார். இதே போல, மற்ற நிறுவனங்கள் முன்னணி ஹீரோக்களின் படங்களை வாங்கி வெளியிட்டால் அப்போதும் இப்படி சொல்வார்களா என்று உதயநிதிக்கு ஆதரவான குரல்களும் எழுகின்றன.
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் இதே போல மாறன் சகோதரர்கள் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியபோது எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. அதே போல, இப்போது உதயநிதி மூலம் எழுவதாகக் கூறுகின்றனர்.
எப்படியா இருந்தாலும், உதயநிதி மானாவரியாக படங்களை வளைத்துப்போடுவதால் சர்சைகள் முளைவிட்டுள்ளது என்ற்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.