விளையாட்டுத் துறை அமைச்சரும், முதல்வர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்பார் எனப் பரபரப்பாக தகவல் பரவிய நிலையில், அந்த செய்திகள் வதந்தி என உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
திமுக இளைஞரணியின் 45-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி தலைமைச் செயலகமான அன்பகத்தில் இன்று (ஜூலை 20) நடைபெற்றது. இதற்கு மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார்.
விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 40-க்கு 40 வெற்றியை கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. பிரதமர் நரேந்திர மோடி 1,000 முறை தமிழ்நாடு வந்தாலும் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காது. இதை தமிழக மக்கள் மக்களவை தேர்தலில் நிரூபித்தனர். இதற்கு முக்கிய பங்காற்றிய இளைஞரணி நிர்வாகிகள், செயலாளர்களுக்கு எனது நன்றி என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணை ஆனவர்கள் தான். எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன். எவ்வளவு பொறுப்புகள் வந்தாலும் இளைஞரணி செயலாளர் பொறுப்பே என் மனதிற்கு நெருக்கமானது.
எனக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க உள்ளதாக கிசுகிசுக்கள் வருகின்றன. கவனித்து வருகிறேன். அனைத்து அமைச்சர்களுமே முதலமைச்சருக்கு துணையாக இருப்போம். நான் துணை முதலமைச்சராவேன் என்று வரும் தகவல்கள் வதந்தி. பத்திரிகைகளில் வரும் வதந்தகளை நம்ப வேண்டாம்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“