தமிழ்நாட்டில் புதிய நிலக்கரி சுரங்கங்களை அமைக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று அமைச்சர் உதயநிதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில், புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் 6வது நிலக்கரி சுரங்க ஏலத்தில் தேர்வான 29 நிறுவனங்களுடன் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ள நிலையில், சுரங்கங்களின் நிலக்கரி விற்பனை தொடர்பான 7வது சுற்று ஏலம் கடந்த மார்ச் 29ம் தேதி தொடங்கியது. அதன்படி, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சை மற்றும் கடலூர், அரியலூர் மாவட்டங்களில் புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி, தமிழ்நாட்டில் புதிய நிலக்கரிச் சுரங்கங்களை அமைக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறினார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி கூறியதாவது: “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க அனுமதி இல்லை. நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து நாளை (ஏப்ரல் 05) சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பார்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"