தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது தி.மு.க இளைஞரணி செயலாளரும், மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின்சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தார். அப்போதே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அமைச்சர் பதவி வழங்கவில்லை. தொடர்ந்து கட்சியில் பலருமே உதயநிதி அமைச்சராக வேண்டும் எனப் பேசினர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கே.என். நேரு, செந்தில் பாலாஜி, சேகர் பாபு உள்ளிட்ட அமைச்சர்களும் உதயநிதி அமைச்சராக வேண்டும் என தங்கள் விருப்பத்தை ஊடகங்களில் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், உதயநிதி அமைச்சராகப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று (டிசம்பர் 12) உதயநிதி அமைச்சராவது குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டது. அதன்படி நாளை (டிசம்பர் 14) காலை 9.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், "உதயநிதிக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன்பே அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். உதயநிதிக்கு எந்த துறையை வழங்குவது என்பது குறித்து முதல்வர் நாளை அறிவிப்பார். அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார்" எனத் தெரிவித்தார்.
நாளை அமைச்சராக பதவியேற்கும் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட உள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“