அடக்கி வாசிக்கும் வேலுமணி; மென்மையாக அறிக்கை விட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ!

உதயநிதி பேச்சுக்கு அதிமுக தரப்பில் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் மென்மையாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Udhayanidhi Speech on Coimbatore people, AIADMK MLA Amman K Arjunan, AIADMK MLA Amman K Arjunan condemns Udhayanidhi, SP Velumani quite, Coimbatore, AIADMK, அடக்கி வாசிக்கும் எஸ்பி வேலுமணி, மென்மையாக அறிக்கை விட்ட அதிமுக எம்எல்ஏ அம்மன் கே அர்ச்சுணன், கோவை, திமுக, உதயநிதி, DMK, Udhayanidhi Stalin, Kovai

திமுக ஆட்சியைப் பிடித்தாலும் கோவையில் ஒரு தொகுதியைக்கூட கைப்பற்ற முடியாமல் போன அதிர்ச்சி அக்கட்சித் தலைமைக்கு நிறையவே இருக்கிறது. கோவையில் திமுக தோல்வியைத் தழுவியதற்கு முக்கிய காரணம், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி என்றே திமுகவினர் பலரின் கருத்தாக உள்ளது. பத்தாண்டு அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையை அதிமுகவின் கோட்டையாக மட்டுமல்ல தன்னுடைய கோட்டையாகவும் மாற்றிவிட்டார் என்கிறார்கள். ஆட்சியில் இருந்தபோது, எஸ்.பி.வேலுமணி எதிர்க்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரை கட்டம் கட்டிவிட்டது. அதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் ஒருவர். திமுக தேர்தல் வாக்குறுதியில் ஊழல் அமைச்சர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியது. அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தினர். இதுவரை, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி என 5 அமைச்சர்களின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமை இதை பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ளது. மாதம் ஒரு சோதனை என்று அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதால் அதிமுக அமைச்சர்கள் பலரும் பெரிய அளவில் விமர்சனங்களை வைக்காமல் அடக்கி வாசித்து வருகின்றனர். திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் அடக்கி வாசிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில்தான், வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கோவை மாநகராட்சி மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் திமுகவினர் வேலை செய்து வருகின்றனர். திமுக தலைமை கோவை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்து அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், பூத் கமிட்டிகளை அமைத்து 25,000 பேர் கலந்துகொண்ட பூத் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தை மாநாடு போல நடத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதியையும் பிரமிக்க வைத்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, இங்கே திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை வாகுகளாக உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியை டேக் செய்து பதிவிட்டார். மேலும், அந்த நிகழ்ச்சியில் பேசிய, உதயநிதி கோயம்புத்துக்காரர்கள் குசும்பு பிடித்தவர்கள் என்று நகைச்சுவையாகப் பேசினார்.

உதயநிதியின் பேச்சு நகைச்சுவையாக சொல்லப்பட்டது என்றாலும் கோவை அதிமுககாரர்கள் இதை சர்ச்சையாக்கி வருகின்றனர். கோவை மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களை குசும்பு பிடித்தவர்கள் என்று சொல்வதா என்று சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு, அதிமுக தரப்பில் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் உதயநிதிக்கு மென்மையாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அம்மன் கே. அர்ச்சுணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக உருவான காலம்முதல் கோவை மக்கள் ஆதரித்துவருகின்றனர்.

கடந்த சட்டப் பேரவை தேர்தலில், திமுகவுக்கு கோவை மாவட்ட மக்கள் வாக்களிக்க வில்லை என்பதால் அவர்களைகுசும்புக்காரர் என்று கொச்சைப் படுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

50 ஆண்டுகால சாதனைகளை ஐந்தாண்டுகளில் கோவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வரலாறு படைத்த எஸ்.பி.வேலு மணியை இந்த மாவட்ட மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். இதற்காக எஸ்.பி.வேலுமணி மீது பொய் வழக்கு போடுவது,பழிவாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும். நாங்கள் அமைதியாக 100 மீட்டர் தூரம் நடந்து சென்றதற்காக வழக்குபோடுகிறீர்கள்.

ஆனால், ஆளும் கட்சி சார்பாக பல்லாயிரக்கணக்கான மக்களை ஓரிடத்தில் அமர வைத்தால் கரோனா வராதா? காலம்வெகுவிரைவில் பதில் சொல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Udhayanidhi speech on coimbatore people aiadmk mla condemns but sp velumani quite

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com