Advertisment

உதயநிதி ஏன் இப்படிப் பேசினார்? திமுக ஆதரவாளர்களும் எதிர்ப்பு

உதயநிதியை ஓரிரு நடிகைகளுடன் தொடர்புபடுத்தி பதில் வக்கிரங்களும் சமூக வலைதளத்தில் வருகின்றன. ஆபாசத்திற்கு, ஆபாசமே பதில் என்பதும் சரியில்லை.

author-image
WebDesk
Jan 08, 2021 13:38 IST
உதயநிதி ஏன் இப்படிப் பேசினார்? திமுக ஆதரவாளர்களும் எதிர்ப்பு

Udhayanidhi Stalin Controversy Speech About VK Sasikala Row: சசிகலா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு, ஆபாசத்தின் உச்சம் என்கிற விமர்சனம் பரவலாக எழுந்திருக்கிறது. பாஜக எதிர்ப்பு என்கிற ஒற்றை அம்சத்தில் திமுக.வை ஆதரிக்கும் நபர்களும்கூட உதயநிதியின் பேச்சை கண்டித்து வருகிறார்கள்.

Advertisment

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை சசிகலா காலில் விழுந்து பெற்றதாக விமர்சனம் செய்தார். அந்தப் பேச்சில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் ஆபாசத்தின் உச்சம் என கடும் கண்டனம் எழுந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், நடிகைகள் குஷ்பூ, காயத்ரி ரகுராம், ஊடகவியலாளர்கள் தராசு ஷ்யாம், ஆ.கே.ராதாகிருஷ்ணன், பிரியன், கார்ட்டூனிஸ்ட் பாலா, சவுக்கு சங்கர் உள்பட பலரும் இதைக் கண்டித்து கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

குறிப்பாக பாஜக எதிர்ப்பு என்கிற ஒற்றைப் புள்ளியில் திமுக.வை ஆதரிக்கும் ஊடகவியலாளர்களும் இந்த விஷயத்தில் உதயநிதியை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். இதற்காக உதயநிதி மன்னிப்பு கோரவேண்டும் என வற்புறுத்தி வருகிறார்கள். எனினும் திமுக தரப்பில் இதற்கு பதில் இல்லை.

உதயநிதியின் இந்தப் பேச்சு குறித்து திமுக பிரமுகர்கள் சிலர் கூறுகையில், ‘வருகிற தேர்தலில் பொதுமக்களின் வாக்கு வங்கியை திமுக பக்கம் திருப்பும் வேலையை தலைமைக் கழகமும், ஐ பேக் நிறுவனமும் பார்த்துக் கொள்கின்றன. அந்த வகையில் ஒன்றிணைவோம் வா, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் ஆகியவை ‘ஹிட்’ ஆகியிருக்கின்றன.

அதேசமயம், கட்சியினரை உற்சாகமாக களப் பணியாற்ற வைக்கவேண்டிய பொறுப்பை உதயநிதி ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதற்கு தேவை, தைரியத்தை வெளிப்படுத்தும் அதிரடி பேச்சு! அதைத்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், கொங்கு மண்டல சீனியர் அமைச்சர்களுக்கு எதிராகவும் உதயநிதி வெளிப்படுத்தி வருகிறார். கட்சியினர் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கவே செய்கிறது.

சசிகலா பற்றிய அந்தக் குறிப்பிட்ட பேச்சில், உதயநிதி ஆபாச வார்த்தை எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் அந்த நிமிடத்தில் சுற்றியிருந்த கட்சிக்காரர்கள் மொத்தமாக சிரித்த விதம் உதயநிதியின் பேச்சுக்கு ஆபாச அர்த்தத்தை சேர்த்துவிட்டது. உதயநிதியும் அந்தத் தருணத்தில் சிரிக்காமல், சற்றே நாகரீகமாக விளக்கம் கொடுத்து கடந்து சென்றிருக்க வேண்டும். அல்லது, தொண்டர்கள் தவறாக புரிந்து கொள்ளும்படி பேசியதற்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருக்கலாம்.

எது எப்படியோ, திமுக பற்றி வெறும் வாயை இணையத்தில் மென்று கொண்டிருந்தவர்களுக்கு 3 நாட்களாக அவல் கொடுத்துவிட்டார் உதயநிதி. இதனால் சமூக வலைதளங்களில் பொள்ளாச்சி பாலியல் கைது, எடப்பாடிக்கு ஸ்டாலின் சவால், திமுக.வின் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் ஆகியவை பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டன’ என வருத்தம் தோயக் கூறுகிறார்கள் திமுக.வினர்.

ஜெயலலிதா மரணம் நிகழ்ந்த போது சசிகலாவுக்கு இருந்த எதிர்ப்பு, இப்போது இல்லை. அவர் சார்ந்த சமூகத்தினர் மத்தியில் ஒரு அனுதாபம் அவருக்கு எப்போதும் உண்டு. இந்தச் சூழலில் உதயநிதி, அரசியலில் இல்லாத அவரைக் குறிப்பிட்டு பேசியிருக்க வேண்டியதில்லை என்றே டெல்டா மாவட்ட திமுக.வினர் குறிப்பிடுகிறார்கள்.

‘கட்சியினரை உற்சாகப்படுத்த உதயநிதி அதிரடியாக பேசுவது சரி! அந்தக் கட்சியினரின் வாக்குகள் இவர் பேசினாலும் பேசாவிட்டாலும் திமுக.வுக்கே வந்து சேரும். அதே சமயம் இவரது பேச்சால், நடுநிலை வாக்காளர்களான மெஜாரிட்டி பெண்களின் வாக்குகளை திமுக இழந்தால், அது மோசமான சேதாரமாகிவிடும். எனவே உதயநிதி அடக்கி வாசிப்பதே நல்லது’ என்கிறார்கள், நடுநிலையான விமர்சகர்கள்.

‘இந்த ஆபாசப் பேச்சுக்காக உதயநிதியை ஸ்டாலின் கண்டிக்க மாட்டார். உதயநிதியின் தாயார் துர்கா ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டிருக்கிறார், பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன். இதற்கிடையில் உதயநிதியை ஓரிரு நடிகைகளுடன் தொடர்புபடுத்தி பதில் வக்கிரங்களும் சமூக வலைதளத்தில் அதிகரித்து வருகின்றன. ஆபாசத்திற்கு, ஆபாசமே பதில் என்பதும் சரியில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

#Dmk #Vk Sasikala #Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment