Udhayanidhi Stalin | Pm Modi | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் வருகிற 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 950 பேர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள நிலையில், தற்போது தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 'பதில் சொல்லுங்கள் மோடி' என்ற ஹேஷ்டேக்கில் பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?. தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா புயல், மிக்ஜம் புயல்... என பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வராதது ஏன்?
2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?. இந்தியாவை 2020-ல் வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்?. கருப்பு பணத்தை மீட்பேன் என்று கடுகு டப்பாவிலும், சுருக்குப் பையிலும் எங்கள் மக்கள் சேமித்து வைத்திருந்த 500, 1000-த்தை பிடுங்கினீர்களே, கருப்புப் பணத்தை மீட்காதது ஏன்?
ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்த உங்களை சி.ஏ.ஜி (CAG) அறிக்கை அம்பலப்படுத்தியும் அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?. அடுக்கடுக்காய் வடக்கே 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஒரே வாரத்தில் திறந்த நீங்கள், 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?
அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?. கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க. அடுக்கடுக்காக தன்னுடைய சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கும்போது, நாட்டை 10 ஆண்டுகள் ஆண்டப் பிறகும் சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளையே நீங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பது ஏன்?
வாழும் தமிழின் வளர்ச்சிக்கு பெரிதாக நிதி இல்லை, செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.1074 கோடி எதற்கு?. நீங்கள் தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்?. #பதில்_சொல்லுங்கள்_மோடி." என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?
— Udhay (@Udhaystalin) April 1, 2024
தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.