நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று அசுர பலரத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்க இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 37 இடங்களில் திமுகவும், தேனியில் மட்டும் அதிமுகவும் வெற்றிப் பெற 37:1 என்ற ரேஷியோவில் மெகா மெஜாரிட்டி பெற்று எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்பவிருக்கிறது திமுக.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் திமுகவின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் குறித்து திமுகவின் இளம் உடன் பிறப்புகள் பாஸிட்டிவ் எண்ணத்தில் இருக்கிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2019/05/z805-300x217.jpg)
அதன் எதிரொலியாக, திமுகவின் பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும், உதயநிதிக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்ற ரீதியில் தலைமைக்கு ஒருசேர கடிதங்கள் அனுப்பி வருகிறார்கள்.
அந்த கடிதத்தில், உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரமும், அணுகுமுறையும் பெருவாரியான கட்சி தொண்டர்களையும் மக்களையும் கவர்ந்ததாகவும், சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக 13 இடங்களில் வென்றதிலும் உதயநிதியில் பங்கு திருப்தி அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிர, தற்போது திமுக இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வரும் வெள்ளக்கோவில் சாமிநாதனின் செயல்பாட்டில் கட்சியினருக்கு இடையே அதிருப்தி இருப்பதாகவும் கூறப்படுவதால், உதயநிதியை அப்பதவியில் அமர வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர்.
திமுக இளைஞரணி செயலாளராகும் உதயநிதி ஸ்டாலின்
அதுமட்டுமின்றி, சமீபத்தில் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்திலும், திமுகவின் வெற்றிக்கு உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பரப்புரை மிக முக்கியமான காரணமாகப் பலரால் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கட்சி மேலிடம் இதை பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவாலய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, வரும் ஜூன் 1ம் தேதி உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்றுக் கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல் திமுகவின் இளம் உடன்பிறப்புகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து உதயநிதியின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜாவிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பில் பேசிய போது, "கட்சிப் பணியில் பல வருடங்களாக ஈடுபட்டு வரும் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்க வேண்டும் என்பது எங்கள் பலரது விருப்பமாகும். இதைக் கட்சி மேலிடத்திலும் நாங்கள் குறிப்பிட்டு இருக்கிறோம். ஆனால், அவரை அப்பதவிக்கு தேர்வு செய்வது என்பது தலைமையின் முடிவு. உதயநிதி அப்பதவிக்கு வந்தால், நாங்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைவோம். அந்த அளவிற்கு நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் அவர் உழைத்திருக்கிறார். கட்சித் தலைமையின் முடிவு எதுவாயினும் நாங்கள் அதற்கு கட்டுப்படுவோம்" என்றார்.