முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோரை அவதூறாக பேசிய புகாரில் இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த விபரம் வருமாறு;
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் கடந்த 19-ம் தேதி விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பேசிய, இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் தண்டபாணி, ‘சனாதனம் பற்றி பேசிய அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டு வந்தால், பிச்சை எடுத்தாவது, ரூ.50 கோடி தருகிறேன்’ என்றார்.
இதுகுறித்து அப்பகுதி திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் துவரங்குறிச்சி போலீஸார் மத உணர்வை தூண்டுதல், பொது அமைதிக்கு கேடு விளைவித்தல், தனி நபர்களை அவதூறாக பேசுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டபாணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 22-ம் தேதி நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்து இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் பேசினார். அப்போது, அவர் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆரணி நகராட்சி மன்றத் தலைவர் ஏ.சி.மணி கடந்த 24-ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் மத உணர்வை தூண்டுதல், பொது அமைதிக்கு கேடு விளைவித்தல், தனி நபர்களை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் ஆரணி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, போலீஸார் அவரை வேலூரில் கைது செய்து சந்தவாசல் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதையறிந்த இந்து முன்னணியினர், சந்தவாசல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
இதேபோல், செய்யாறில் கடந்த 22-ம் தேதி நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசிய இந்து முன்னணி மாநில செயலாளர் மணலி மனோகர், தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதுகுறித்து நகர திமுக செயலாளர் விஸ்வநாதன் கொடுத்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சென்னை மணலியில் உள்ள வீட்டில் இருந்த மனோகரை கைது செய்து செய்யாறு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த கைது நடவடிக்கைகளை கண்டித்து திருவண்ணாமலை காந்தி சிலை அருகே மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார் தலைமையிலும், செய்யாறில் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் விநாயகர் சிலைகளை வைத்து அரசியல் செய்யக்கூடாது என நீதிமன்றம் எச்சரித்த நிலையில் இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரையும், அமைச்சரையும் தரக்குறைவாக பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“