சென்னை காமராஜர் சாலையில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய உதயநிதி ஸ்டாலினின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் சென்னையில் வாகன போக்குவரத்து கணிசமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை காமராஜர் சாலையில் இரு சக்கர வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கியவர்களுக்கு சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உதவி செய்தார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்த செம்மஞ்சேரியைச் சேர்ந்த ராணி என்பவரது உடலை, கடற்கரை சாலை வழியாக அமரர் ஊர்தியில் எடுத்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு இரு சக்கர வாகனம் அமரர் ஊர்தியை முந்தி செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் காயம் அடைந்தனர்.
அப்போது, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் கொரோனா ஆய்வு பணிகளை முடித்துவிட்டு, அந்த வழியாக வந்த சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், விபத்தைப் பார்த்ததும், தனது வாகனத்தை நிறுத்தி இறங்கி வந்தார். பின்னர், விபத்தில் சிக்கியவர்களைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்தார். ஆம்புலன்ஸ் வந்தவுடன் காயமடைந்தவர்களை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், வேறு ஒரு அமரர் ஊர்திக்கு ஏற்பாடு செய்து, விபத்தில் சிக்கிய அமரர் ஊர்தியிலிருந்த பெண் சடலத்தை செம்மஞ்சேரிக்கு அனுப்பி வைத்தார்.
விபத்தில் சிக்கியவர்கள், திருவொற்றியூரைச் சேர்ந்த சுங்கத்துறையில் வேலை செய்யும் பிரேம்நாத் மற்றும் அவரின் உறவினர் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக, சிந்தாதரிப்பேட்டை புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் உதவிய வீடியோக்கள் தற்போது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil