Advertisment

ஸ்டாலினை மீண்டும் தமிழக முதல்வராக ஆட்சியில் அமர செய்ய வேண்டும் - கும்பகோணத்தில் உதயநிதி பேச்சு

தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வழிகாட்டி திட்டங்களான புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், ஒரு கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் உள்ளன – கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

author-image
WebDesk
New Update
Udhayanidhi Kalaingar

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வளையப்பேட்டை பகுதியில் தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உருவசிலையுடன் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கலைஞர் கோட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

Advertisment

பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; ”தஞ்சை வடக்கு மாவட்டத்தில் கருணாநிதி உருவ சிலை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கருணாநிதி உருவ சிலையை திறந்து வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் எம்.பி கல்யாணசுந்தரம் ஆகியோர் கலைஞரின் கோட்டத்தை கும்பகோணத்தில் சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

கும்பகோணம் தி.மு.க.வின் மண் என்பது கருணாநிதிக்கு மட்டும் அல்ல, இந்தி எதிர்ப்பு போராட்டம், கருப்பு கொடி போராட்டம் என தஞ்சையில் நீலமேகம் தலைமையில் சிறப்பாக நடத்திக்காட்டினர். அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிவாகை சூடியவர் கருணாநிதி. தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் 100 சதவீதம் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மயிலாடுதுறையிலும் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றுள்ளார்.

75 ஆண்டுகால வரலாற்றில் இந்தியாவை தீர்மானிக்கும் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி. அதுமட்டுமல்ல இந்தியாவிற்கே வழிகாட்டியவர். தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வழிகாட்டி திட்டங்களான புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், ஒரு கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் உள்ளன. மேலும் மகளிர் உரிமை திட்டம் அனைத்து தகுதி உள்ள மகளிர்களுக்கும் கிடைக்கும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழக உடன்பிறப்புகள் சிறப்பாக பணியாற்றி மீண்டும் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக ஆட்சியில் அமர செய்ய வேண்டும் எனப் பேசினார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சி குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து மடல் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மடலும் உதயநிதி வசம் ப்ரேம் செய்து கொடுக்கப்பட்டது. அந்த மடலில் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது; விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணம் வட்டம், வலையப்பேட்டை மாங்குடி கிராம முகப்பில், கழக மாநிலங்களவை உறுப்பினர், தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் சீரிய முயற்சியின் விளைவாக கட்டப்பட்டுள்ள நூலகத்துடன் கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் கோட்டம் கட்டடத்தையும், அதில் நிறுவப்பட்டுள்ள, அமைச்சர் எ.வ.வேலு வழங்கியுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவ சிலையையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்திடும் இனிய விழா இன்று (26ம் தேதி) நடைபெறுவது அறிந்து நெஞ்சம் மகிழ்கிறேன்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் வழியில் முத்தமிழறிஞர் கலைஞர் தம் வாழ்நாளெல்லாம் கடுமையாக உழைத்து, தமிழர் வாழ்வில் வளமும், வலிமையும் சேர்க்கும் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி கல்வி, அறிவியல், தொழிற்நுட்பம், அரசியல், பொருளாதார, சமுதாய நிலைகள் அனைத்திலும் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு எனும் பெருமையை நமக்கு தேடித் தந்தார். உலகெங்கும் வாழும் தமிழர்களின் காவல் அரணாக தலைவர் கலைஞர் விளங்கினார். அவர் எழுப்பிய ஜனநாயக, சமூகநீதி, சமத்துவ சிந்தனைகளே இன்று இந்திய நாடெங்கும் எதிரொலிக்கின்றன. 

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி நான் மாவட்ட கழக செயலாளர்களுக்கு வழங்கிய அறிவுரைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவ சிலையையும், திராவிட முன்னேற்ற கழகத்தின் கிளையை முதன் முதல் உருவாக்கி, படிப்பகமும் கட்டி கழகம் வளர்த்த மூத்த முன்னோடி, நினைவில் வாழும் மொழிப்போர் தியாகி வீ.இரத்தினம், முத்தமிழறிஞர் கலைஞரின் சிறப்பு உதவியாளராக திகழ்ந்த புலவர் முத்து.வாவாசி தம்முடைய மாங்குடி கிராமத்தில் நிறுவியுள்ள சிலை ஆகியவற்றை திறந்து வைத்திடும் விழாக்கள் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நிகழ உளமார வாழ்த்துகிறேன். கழகமே உயிர் மூச்சென வாழ்ந்த வீ.இரத்தினம் போன்ற கழகத்தின் அடிப்படை தொண்டருக்கும் சிலை அமைத்து மரியாதை செலுத்தப்படுவது எந்தவித எதிர்பார்ப்புமின்றி, கழகத்தின் வளர்ச்சிக்காக உழைத்து வரும் தொண்டர்களுக்கு உற்சாகமும், ஊக்கமும் அளிக்கும் பணியாகும்.

இப்பணியை முன்னெடுத்துள்ள தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் அன்பிற்கினிய திரு. எஸ்.கல்யாணசுந்தரம், மொழிப்போர் தியாகி பெரியவர் வீ.இரத்தினம் சிலை எடுத்து சிறப்பித்துள்ள புலவர் முத்து.வாவாசி அவர்களுக்கும், இந்த மகத்தான விழா வெற்றிபெற துணைநின்ற கழக அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். 

மேற்கண்டவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Udhayanidhi Stalin Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment